கிளிநொச்சி கண்டாவளைக் கல்விக் கோட்டதுக்கு உள்பட்ட பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களின் வருகைக்காக ஒன்றரை மணி நேரம் மாணவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அதிகாரிகளின் இந்தச் செயற்பாடு குறித்து பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு உள்பட்ட. கண்டாவளை கல்விக் கோட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வலயக் கல்வி அலுவலகத்தின் உரிய அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (டிசெ.28) முற்பகல் 11 மணிக்கு நிகழ்வை நடத்துவதற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னனுமதி வழங்கப்பட்டது.

உதவிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முதன்மை விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் கல்வி அதிகாரிகள் உரிய நேரத்திற்கு நிகழ்வுக்கு வருகை தரவில்லை. நண்பகல் 12.37மணிக்கே அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்தனர். அதனால் நண்பகல் 12.45 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.
கல்வி அதிகாரிகளின் வருகைக்காக குறித்த பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் காத்திருந்தமையானது பலரையும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.