வீடியோ தொழில்நுட்பத்தில் கல்வி கற்பதால் பிள்ளைகளின் கண்கள் பாதிக்காது; நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றவேண்டும் – மருத்துவ வல்லுநர் மலரவன்

வீடியோ தொழில்நுட்பத்தில் கல்வி கற்பதால் பிள்ளைகளின் கண்கள் பாதிக்காது; நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றவேண்டும் – மருத்துவ வல்லுநர் மலரவன்

“நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் திரைகளைப் (Device Screen) பார்த்து மாணவர்கள் கல்வி கற்பதனால் கண்களுக்கு பார்வைப் பாதிப்பு ஏற்படாது. ஆனால் மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளால் கண்களுக்கும் மூளைக்கும் அசௌகரியங்கள் ஏற்படும்.”

இவ்வாறு விளக்கமளித்துள்ளார் கண் சத்திரசிகிச்சை வல்லுநர் முத்துசாமி மலரவன்.

மடிகணினி, அலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் சூம், ஸ்கைப் உள்ளிட்ட மென்பொருள்களில் நேரலை காணொலி ஊடாக மாணவர்கள் நீண்ட நேரம் கல்வி கற்பதனால் கண்கள் பார்வைப் பாதிப்பு ஏற்படும் என்றும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவெளி விட்டு அவற்றில் பாடநெறியைத் தொடரவேண்டும் என்று வெளியாகியுள்ள தவறான தகவல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கண் சத்திரசிகிச்சை வல்லுநர் எம்.மலரவன், முதல்வனிடம் தெரிவித்ததாவது;

நவீன சாதனங்களின் திரைகளில் கல்வி கற்பதனால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான – விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத தகவல்களை வெளியிடுவதன் ஊடாக அச்சம் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும். வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பின்தங்கிச் செல்லும் நிலையில் இவ்வாறான தகவல்களும் இன்னும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

தற்போதைய உலக ஒழுங்கில் நவீன சாதனங்களின் திரைகளைப் பார்த்து கல்வி கற்பதற்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். அதுவும் தற்போது உலகில் ஏற்பட்டுள்ள கோவிட் – 19 தொற்று நோய் காரணமாக மாணவர்களின் கல்வி நவீன தொலைத்தொடர்பு சாதனங்களில்தான் இடம்பெறுகின்றன. இந்த நடைமுறை தொடரப் போகின்றது.

எனவே நவீன சாதனங்களின் திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதனால் கண்கள் பாதிக்கும் என்ற கருத்தை உருவாக்கினால் அது மாணவர்களின் கல்விநிலையைப் பாதிக்கும். அவற்றைப் பயன்படுத்துவதனால் கண்கள் பாதிக்கும் என்ற விஞ்ஞான ரீதியான எந்தத் தகவலும் இல்லை.

ஆனால் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்தும் முறையில் கண்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். அதாவது கண்கள் எரிவு, வலி, தலையிடி போன்ற அசௌகரியங்கள் இருக்கும்.

கண்களை மூடித் திறக்கவேண்டும்

நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் திரைகளில் கல்வி கற்கும் போதும் பணிகளில் ஈடுபடும் போதும் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்ணை ஒரு விநாடி மூடித் திறக்கவேண்டும். அதாவது சாதாரணமாக எமது கண்கள் மணிக்கு 12 தொடக்கம் 15 முறை எம்மை அறியாமல் மூடித் திறக்கின்றன. அதனால் கண்கள் சரியாக இயங்குவதற்கான சக்தி கிடைக்கின்றது.

ஆனால் சாதனங்களின் திரையை நாம் தொடர்ச்சியாக அருகாமையில் வைத்து குறும் பார்வையில் பார்ப்பதனால் கண்கள் மூடித் திறப்பது இல்லாமல் போகின்றது. அதனாலேயே சாதனங்களின் திரைகளில் கல்வி கற்கும் போது அல்லது பணியில் ஈடுபடும் போது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை மூடித் திறக்கவேண்டும்.

தூரப் பார்வை

நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் திரைகளில் கல்வி கற்கும் போதும் பணிகளில் ஈடுபடும் போதும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை சுமார் 20 அடி தூரத்துக்காவது தூரப் பார்வை செலுத்தவேண்டும். அல்லது கண்களை மூடிவிட்டுத் திறக்கலாம். அதனால் கண்கள் குறும் பார்வையில் தொடர்ச்சியாக இருப்பதிலிருந்து விடும்.

ஃப்ளோரா விளக்குகளின் ஒளித் தெறிப்பு

நவீன சாதனங்களைப் பயன்படுத்தும் போது ஃப்ளோரா மின்குமிழ்களின் வெளிச்சம் திரைகளில் பட்டு தெறிப்பு ஏற்படுவதால் கண்களுக்கு கூச்சம் ஏற்படுகின்றது. அதனாலும் கண்களுக்கு அசௌகரியங்கள் ஏற்கின்றது. ஆகவே மின்குமிழ்களுக்கு நேராக சாதனத்தின் திரையை வைத்துப் பயன்படுத்துவதனால் கண்கள் கூச்சம் உள்ளிட்ட அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றன.

எனவே மின்குமிழ்களின் வெளிச்சத்துக்கு எதிர்மாறாக சாதனங்களைப் பயன்படுத்து அவசியமாகின்றது.

இருக்கைகளில் இருக்கும் விதம்

சாதனங்களைப் பயன்படுத்தும் போது ஆசனங்களில் சரியான முறையில் இருக்கவேண்டும். நிமிர்ந்து கால்களை இலகுவாக விட்டு இருப்பதனால் கண்களுக்கும் மூளைக்கும் சௌகரியமாக அமையும்.

இவ்வாறு நான்கு நடைமுறைகளையும் சீராக பின்பற்றுபவர்களின் கண்களுக்கு எந்தவொரு அசௌகரியங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு சரியான முறைகளில் சாதனங்களைப் பயன்படுத்தும் போதும் சிலருக்கு தலையிடி உள்ளிட்ட சில அசௌகரியங்கள் 5 சதவீதத்தினருக்கு ஏற்படலாம். அவ்வாறானவர்கள் கண் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்று மூக்குக் கண்ணாடி பயன்படுத்துவது அல்லது முறையான கண் பயிற்சிகளைச் செய்வது நிவாரணமாக அமையும். கண் வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் போது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் செயற்கை கண்ணீரை பயன்படுத்துவதன் ஊடாகவும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

கண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை
தவிர்ப்பதற்கான சில நடைமுறைகள்

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாட நேர அட்டவணை ஒதுக்கீடு செய்யும் போது ஒவ்வொரு பாடத்துக்கும் 40 நிமிடங்களை (உயர்தர மாணவர்களாயின் 45 – 60 நிமிடங்கள்) வழங்குவதுடன் 10 தொடக்கம் 20 நிமிடங்கள் இடைவேளையும் வழங்குவது அவசியம். அந்த இடைவேளையின் போது, மாணவர்கள் தூரப் பார்வை செயற்பாட்டுக்கு இடமளிக்கப்படவேண்டும்.

இதுதொடர்பில் நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

அதன்மூலம் மாணவர்களுக்கு கண்கள் மற்றும் மூளைக்கு ஏற்படும் அசௌகரியங்கள் நீங்கும். இந்த ஒழுங்குமுறையை பெற்றோர்களும் கண்காணிக்கவேண்டும்.

வெளிப்புறச் செயற்பாடுகளில்
ஈடுபடல் அவசியம்

பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே தொடர்ச்சியாக இருக்க அனுமதிக்காது வெளிப்புறச் செயற்பாடுகளிலும் கட்டாயம் ஈடுபடுத்தவேண்டும். மைதானங்களில் விளையாடுவது, சூரிய ஒளி உள்ள வேளைகளில் வெளிப்புறங்களில் உடற்பயிற்சி உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் கண்களின் தூரப் பார்வை பாதிப்புகள் ஏற்படாது தவிர்க்க முடியும்.

குறைந்தது தினமும் ஒரு மணி நேரம் பிள்ளைகள் மட்டுமல்லாமல் அனைவரும் வெளிபுறச் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். வீட்டுக்குள் அல்லது அலுவலகத்துக்குள் இருந்து பணியாற்றுவதனால் தொடர்ச்சியான குறும் பார்வையே இடம்பெறுகிறது. அதனாலேயே வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் தூரப் பார்வை கண்களுக்குக் கிடைக்கிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொரு வீட்டு வளாகத்திலேயே வெளிப்புறச் செயற்பாடுகளுக்கு தேவையான இடவசதிகள் உண்டு.

இலங்கையில் இளம் பராயத்தினர் (முன்பள்ளி, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்) 100 பேரில் 7 தொடக்கம் 10 பேர் மூக்குக் கண்ணாடி பயன்படுத்துபவராக உள்ளனர். அவர்களுக்கு கண் நோய் இல்லை. எனினும் தூரப் பார்வைக்காக அவர்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.

கோவிட் – 19 நோயால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதனால் இந்த சதவிகிதம் அதிகரிகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது என்பதை வலியுறுத்துகின்றோம்.

கண்களுக்கு ஏற்படும் அசௌகரிகளுக்கு மருந்துகள் இல்லை. தேவை ஏற்படியின் கண்ணாடி அணிவது அல்லது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கண்களுக்கான பயிற்சிகளின் ஊடாகவே அவற்றிலிருந்து விடுபட முடியும்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாதனங்களின் திரைகளில் அதிக நேரம் பணியாற்றுவதனால் குறும் பார்வை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய மூக்குக் கண்ணாடி அணிந்து கொள்வதனால் தலையிடி போன்ற அசௌகரியங்கள் கண்களுக்கு ஏற்படாது – என்றார்.