Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ் சிவில் அமையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பில் அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயமும் தெய்வச்சிலைகளும் இனந்தெரியாதவர்களென வழமை போன்று கூறப்படும் இனவழிப்பாளர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளமை 26.03.2023 அன்று தெரிய வந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் தமிழ், அல்லது அவர்களது அடையாளங்களுள் ஒன்றான சைவ அடையாளங்கள் நிராகரிக்கப்பட்டு பௌத்த அடையாளத்திற்குரியது என  ஆக்கிரமிக்கப்படுவதும் அவை சிங்கள பௌத்தர்களின் அடையாளம், அவர்களின் வரலாற்று வாழிடம் என்ற புனைவை உருவாக்கும்  சிறீலங்காவின் பௌத்த மதத்திற்குரிய வகையில் வரலாற்றுத் திரித்தல்களைக் காலங்காலமாகச் செய்து வரும் தொல்லியல் திணைக்களத்தால் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ள பல நூறு தமிழ் தொன்மை மரபு அடையாளச் சின்னங்கள் நிறைந்த இடங்களில் வெடுக்குநாறி மலையும் ஒன்று. 

வெடுக்குநாறி மலையை சிறீலங்காவின் தொல்லியல் திணைக்களம் வழமை போன்று வரலான்றுப் புரட்டுகளாலும், படை வலிமையாலும் நீதித்துறை மற்றும் தொல்லியல் துறையின்  ஆதரவுடனும்  ஆலய பரிபாலன சபையினரை வெளியேற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் இந்த அநியாயம் நடைபெற்றுள்ளது.

இனவாதத்தால் தானே வரவழைத்துக்கொண்ட பொருளாதாரப் பேரழிவின் மூலம் உலகையே தன்னை உற்றுப்பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது சிறீலங்கா. அத்துடன் சிறீலங்கா அரசு தனது அன்றாட செயற்பாடுகளுக்கே நிதியின்றித் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிலையிலும் கூடத் தமிழினத்தின் மீதான இனவழிப்பையும் தமிழர் பிரதேசங்களைப் பௌத்த மயமாக்கும்  வேலைத் திட்டத்திட்டத்தையும் எந்த விதத்திலும் சிறீலங்கா அரசு தளர்த்தத் தயாரில்லை என்பதையே இந்த சிலையுடைப்பு தமிழ் மக்கள் மத்தியில் நிரூபித்து நிற்கின்றது. பிச்சையெடுத்தேனும் இனவழிப்பைத் தொடர்வோம் என சிங்கள பௌத்த தேசம் கங்கணம் கட்டி நிற்கின்றது.

அதேவேளை வழமைபோன்று உலகமும் அண்டை நாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வாறான அழிப்புகளுக்கு எந்த எதிர் வினையுமின்றி செயலற்று இருக்கின்றன.

இந்தநிலையில் நாளை வியாழக்கிழமை மார்ச் 30 அன்று வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்புக்கு எதிராக வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளனர். தமிழ் சிவில் சமூக அமையம் இந்த அழிப்புக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தனது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குவதுடன் தமிழ் மக்களையும் பரந்த அளவில் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாலய அழிப்புக்கும் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டும்  என்றும் வேண்டி நிற்கின்றது.- என்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular