உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரொயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்யும் நோக்குடன் கடத்த முற்பட்டவருக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் நாவற்குழியைச் சேர்ந்த கந்தையா தியாகராஜா (வயது -45) என்ற நபருக்கே இன்று புதன்கிழமை தண்டனைத் தீர்ப்பளித்தது வவுனியா மேல் நீதிமன்றம்.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து எதிரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கிலோ 135 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அவருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளையடுத்து 2019ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்யும் நோக்குடன் கடத்த முற்பட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.
“அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் பொலிஸ் சாட்சிகளின் அடிப்படையில் எதிரி மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுனர் நிரூபித்துள்ளார். அதனால் எதிரி மீதான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படுகிறார்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தனித்தனியே தூக்குத் தண்டனை என இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கி தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டத்தரணிகள் தர்சிகா திருக்குமாரநாதன், ஆறுமுகம் தனுசன் ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தினர்.