சர்வகட்சி மாநாட்டின் போது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் உள்ளடக்கிய கலந்துரையாடல்களின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் முழு நாட்டையும் பாதிக்கும் எனவும் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு- கிழக்கு அபிவிருத்தித் திட்டம் ஆகிய இரண்டும் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்துவதே மாநாட்டின் முதன்மையான நோக்கமாகும்.
இந்த மாநாட்டுக்கான அழைப்புக் கடிதங்கள் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு ஒருமித்த கருத்துக்கு வரவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தெற்கில் உள்ள கட்சிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கும் அதிகாரப் பகிர்வு பொறிமுறை தொடர்பாக வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பல சுற்றுக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.