18 மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தில் மீண்டு உறுதிநிலையை அடையும் என பிரதமர் எதிர்பார்ப்பு

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்திய ஊடக வலையமைப்பான WION சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடன் உதவி தொடர்பில் அரசு தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோரும் அதே வேளையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் நிலையான மட்டத்தில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகவும், எனவே பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்மொழியப்பட்டவாறு அரசு 2020 இல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையால் சுட்டிக்காட்டியபடி, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கிறது என்றும் உலக வல்லரசுகளின் ஆதரவு தேவை என்றும் பிரதமர் ஒப்புக்கொண்டார்.

ஏற்றுமதி சார்ந்த வணிக மாதிரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இலங்கையை போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

அதிக முதலீடுகளை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தையும், நாட்டில் இயங்கும் தனியார் துறையைக் கொண்டிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

தனது இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “கடனை மீளச் செலுத்துவதற்கும், அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும், நலிவடைந்த மக்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்குவதற்கும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக வரி முறையை சீர்திருத்துவதற்கும் கூடுதல் நிதியை வழங்குவதற்கு முன்மொழியப்படும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும் என்பதால் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை உறுதிப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளதாக பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் போன்ற சில அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரின் ஆதரவை நாடுவதாகவும் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வெளி காரணிகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், “சீனா இலங்கைக்கு கடன் ஏற்பாடுகள் மூலம் உதவி செய்து வருகிறது, ஆனால் இந்தியா பல முனைகளில் அரசுக்கு கடுமையாக ஆதரவளித்து வருகிறது.

இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும், இந்திய அரச அதிகாரிகள் பலருடன் தான் பேச்சு நடத்தி வருவதாகவும் பிரதமர் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதும் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும் காலத்தின் தேவையாகும் என பிரதமர் கூறினார்.

கூடிய விரைவில் நாட்டை உறுதியான நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், எனவே அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் தனக்கு ஆதரவு தேவை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.