
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை இன்றிலிருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் இடம்பெற்றது
அசிஸ்ட் ஆர் ஆர் ஐக்கிய இராச்சியம் – இலங்கை ( Assist Resettlement & Renaissance UK & SL) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டி கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இரத்தினபுரி மருத்துவமனைகளின் நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை யாழ் போதனா மருத்துவமனையில் கண் சிகிச்சை மருத்துவ வல்லுநர் முத்துசாமி மலரவனின் நெறிப்படுத்தலில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று காலை ஆரம்பமான கண்புரை சத்திர சிகிச்சையில் யாழ்ப்பாண சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்டோருக்கும் அனுராதாபுரம், மதவாச்சி, பதவியா பகுதிகளில் இருந்து 170 க்கும் மேற்பட்டோருக்கும் இன்றைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் நாள்களிலும் குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளது.



