2 வருடங்களில் மின்சார சபை ஊழியர்களுக்கு 367 மில்லியன் ரூபா அனுமதியின்றிய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமைச்சரவையின் அனுமதியின்றி இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு பல்வேறு கொடுப்பனவுகளாக 367 மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராய தனியான கூட்டமொன்றை நடத்தவும் கோப் குழு தீர்மானித்துள்ளது.

2021ஆம் ஆண்டு வரைவு கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை தனது ஊழியர்களின் சம்பளத்தை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த வரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினர், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடாத காரணத்தினால் கூட்டு உடன்படிக்கை முடிவடையாத வரைவு உடன்படிக்கை என்பதால் இது சட்டபூர்வமான ஆவணம் அல்ல என தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவு காரணமாக சபைக்கு ஏற்பட்ட பாதகமான விளைவு தோராயமாக 9.6 பில்லியன் ரூபாய் என கோப் குழு விளக்கமளித்துள்ளது.