குடும்பத்தலைவரை வெட்டிக் காயப்படுத்திய நால்வருக்கு தண்டனை – யாழ். மேல் நீதிமன்று தீர்ப்பு

0

நாரந்தையில் குடும்பத்தலைவர் ஒருவருக்கு வெட்டிப் படுகாயம் ஏற்படுத்திய 4 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு இரண்டாவது எதிரி 6 இலட்சம் ரூபாவையும் ஏனைய மூவர் தலா 2 லட்சம் ரூபாவையும் இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதியன்று ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியைச் சேர்ந்த அன்ரன் எட்வெட் ஹென்றி என்பவரை  கும்பல் ஒன்று வெட்டிக் காயப்படுத்தியது. அவரது ஒரு கை துண்டாகியது.

இந்நச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுதனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் டெலஸ் டிலக்ஸன், சிவராசா கமிஸ்ரன், சச்சிதானந்தம் லக்ஸ்மன், சச்சிதானந்தம் சஜீவன் ஆகிய நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு 4 சந்தேநபர்களுக்கும் எதிரான வழக்கு ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டன. சந்தேகநபர்களும்  பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 4 பேருக்கும் எதிராக கொலைமுயற்சி குற்றச்சாட்டு முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

எதிரிகள் நால்வரும் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

“எதிரிகள் நான்கு பேரும் குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அது தொடர்பில் அவர்கள் இப்போது வருந்துகின்றனர். எனவே அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டையை வழங்கவேண்டும்” என்று எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எஸ். செலஸ்ரின் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“எதிரிகள் குற்றத்தை தாமாகே முன்வந்து ஒத்துக்கொண்டுள்ளனர்.
இது கொலை முயற்சிக் குற்றமாகும். அதற்கு அதிகபட்ச தண்டை விதிக்கப்படுவதுடன் அவர்களால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்” அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

“எதிகள் நான்கு பேரும் தம் மீதான கொலை முயற்சிக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் 4 பேரையும் மன்று குற்றவாளிகளாக இனங்கண்டு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கிறது.
பாதிக்கப்பட்டவருக்கு இரண்டாவது எதிரி 6 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். முதலாவது, மூன்றாவது மற்றும் நான்காவது எதிரிகள் பாதிக்கப்பட்டவருக்கு தலா 2 லட்சம் ரூபா நிதியை வழங்கவேண்டும். அதனை வழங்காவிடின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
4 எதிகளும் தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

இழப்பீட்டு மற்றும் தண்டப்பணம் செலுத்த குற்றவாளிகள் நால்வருக்கு வரும் ஏப்ரல் 24ஆம் திகதிவரை அவகாசம் வழங்கி மன்று உத்தரவிட்டது.

இதேவேளை எதிரிகள் 4 பேரும் 25 வயதுக்குள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here