கேரளாவில் பழங்குடி இன இளைஞன் கொடூரக் கொலை; சர்ச்சையை சமாளிக்க அரசால் ரூபா 10 லட்சம் உதவி

0

 

அரிசி திருடியதாக குற்றம்சாட்டி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட பழங்குடி இளைஞரின் குடும்பத்தினருக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் குறும்பர் எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீது, கடையில் அரிசி திருடியதாக குற்றம்சாட்டி, ஊர் மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞரை அடித்தபின்பு, அவர் முகத்தில் ரத்தத்துடனும், சட்டை கிழிந்தபடியும் வெறுமையாக காட்சியளிக்கும் ஒளிப்படமும், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இரக்கமின்றி செல்பி எடுக்கும் ஒளிப்படமும் இணையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)வைரலானது.

 

கேரளாவின் அட்டப்பாடியில் உள்ள முக்கலியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து பொலிஸார் அங்கு சென்றபோது, ஹூசைன் முகமது, மனு தாமோதரன், அப்துல் ரகுமான், அப்துல் லத்தீப், அப்துல் கரீம், உமர், ஜோசப் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், மது அரிசியை திருடியதால் அடித்ததாக கூறி, அரிசி மூட்டையுடன் பொலிஸ் ஜீப்பில் ஏற்றியுள்ளனர்.

பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, போலீஸ் ஜீப்பில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதனிடையே, இந்தக் கொலையைக் கண்டித்து கேரளாவின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு கேரள அரசிடம் கேட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அந்த மாநில தலைமை செயலாளரிடம் கேட்கப்பட்டுள்ளதாக, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓராம் தெரிவித்தார்.

மேலும், மதுவின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.