ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பணிப்பு

0

வடக்கு மாகாணத்தில் அதிக சத்தத்துடன் ஆலயங்களில் ஒலிபெருக்கி இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பொலிஸாருக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதால் அவற்றின் சூழலில் வாழும் வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், குற்றவியல் சட்டக்கோவையின் 98ஆம் பிரவின் கீழ் ஆலய நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பொலிஸாருக்குச் சுட்டிக்காட்டினார்.

 

வடக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையே சிறப்புச் சந்திப்பு ஒன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
சந்திப்புத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

காலத்துக்குக் காலம் பொலிஸாருடன் பேச்சுக்கள் நடத்தப்படும். எமக்கு மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் பொலிஸாரிடம் தெரிவிக்கப்படும். அதுதொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும்.

வடக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பொலிஸாருக்கு உள்ள பற்றாக்குறையை நிரப்புவதற்காக 81 ஆண்களும் 2 பெண்களும் இங்கு புதிய பொலிஸ் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை போதாது. எனினும் முதல் கட்டமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவைக்குள் இணையுமாறு தமிழ் இளையோரிடம் நான் கோருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை விமர்சித்துள்ளார். பொலிஸில் இணையுமாறு முதலமைச்சர் ஏன் கோருகிறார்? என்பதாக அவர் கேள்வி எழுப்புகிறார்.

தமிழ் பேசுகின்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லை என்றார் எமது மக்கள்தான் பாதிக்கப்படுவர். எமது மக்கள், பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு ஒன்றை வழங்கவேண்டுமாயின், அங்கு தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர் இல்லாவிடின் பல மணிநேரம் காத்திருக்கவேண்டும். எனவே பாதிக்கப்படுவது எமது மக்கள்தான்.
இதனால்தான் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு எம்மால் கோரப்பட்ட நிலையில் தற்போது 83 பேரை புதிதாக நியமித்துள்ளனர்.

ஆலயங்களில் ஒலிபெருக்கி விவகாரம்

ஆலயங்களில் ஒலிக்கவிடப்படும் ஒலிபெருக்கிகளின் சத்தங்களால் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தன. இந்த நடவடிக்கைக்கு எதிராக குற்றவியல் சட்டக்கோவை 98ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸாரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன். அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணல் கடத்தல் தடுப்பு

சட்டவிரோத மண் அகழ்வுகள் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் கருத்து வெளியிட்டனர். மணல் கடத்தல்களைத் தடுக்க தங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகப் பொலிஸார் கூறினர்.

கட்டாக்காலிகள் திருட்டு

யாழ்ப்பாணம் தீவகத்தில் கட்டாக்காலி மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொலிஸாரிடம் எடுத்துக் கூறினேன். தீவகத்தில் கட்டாக்காலி மாடுகளை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுமாயின் மாடுகள் திருடப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. மாட்டிறைச்சி உண்பவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்ற முறையில் பொலிஸாரின் யோசனை நிராகரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here