மன்னாரில் எலும்புத் துண்டுகள் மீட்பு! மற்றொரு மனித புதைகுழியா? விசாரணைகள் தீவிரம்

0
மீட்கப்பட்ட எலும்புகள்

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் அகழப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று (26) காலை மீட்கப்பட்டன.

அவை மனித எலும்புக்கூடுகளா அல்லது மிருகங்களின் எலும்புகளா? என்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது.

பழைய கட்டடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வரும் மண் மன்னாரில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடு ஒன்றுக்கு விற்கப்பட்ட மண்ணில் சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல மீட்கப்பட்டுள்ளன என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ´சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு டிப்பர் மண்ணை பணம் கொடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார்.

அந்த மண் அவரது வீட்டுக்கு வெளியில் கொட்டப்பட்ட நிலையில் மண்ணை அள்ளி வீட்டு வளவினுள் கொண்டியுள்ளார்.

எனினும் மண்ணில் இருந்து சந்தேகத்துக்கிடமான எலும்புத்துண்டுகள் பல வர தொடங்கின. அது குறித்த வீட்டின் உரிமையாளர் சந்தேகம் கொண்டு நேற்று (25) மாலை மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் பொலிஸார் அந்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.

இன்று (26) காலை 10 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா தடவியல் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட எலும்புத்துண்டுகள் மனிதனுடையதா அல்லது மிருகங்களினுடையதா? என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும் வரை சந்தேகத்திற்கிடமான எலும்புகள் மீட்கப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை,  மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. அத்துடன் மன்னார் – மதவாச்சி வீதி உயிலங்குளம் பகுதியிலிருந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.