அட்சய திருதியை புதனன்று – தங்கம் வாங்க நீங்கள் தயாரா?

0

 

அட்சய திருதியை நாள் நாளைமறுதினம் புதன்கிழமையாகும். அன்றைய நாளில் தங்கம் வாங்கினால், பொன் பெருகும் என்பது ஐதிகம். யாழ்ப்பாணத்தில் அட்சய திருதியை தங்கத் திருநாள் விழா ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்றைய நாளில் நகை வியாபார நிலையங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூணும். தமது வசதிக்கு ஏற்ப மக்கள் தமக்குப் பிடித்தமான நகைகளைக் கொள்வனவு செய்வர். அவர்களுக்கு மகிழ்வூட்ட நகைக் கடைகளால் பெறுமதிமிக்க அன்பளிப்புகளும் வழங்கப்படும்.

குபேரன் தான் இழந்த நிதிகளைத் திரும்பப்பெற்ற தினம் இந்த அட்சயத் திருதியை என்று புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் கிருஷ்ண பகவானுக்கு, அவல் கொடுத்து குசேலன் குபேரன் ஆனதும் இந்த நன்னாளில்தான். பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றனர். அதுவும் இதே நாளில்தான்.

இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது.
அதுதான், நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் சிறி அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது.


அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, தங்கம் உள்பட மங்களப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருள்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருள்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here