உள்ளக விசாரணையில் துளியளவேணும் நம்பிக்கையில்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சூகாவிடம் இடித்துரைப்பு

0

“இறுதிப் போரின் நிறைவில் எமது பிள்ளைகள் சரண்டைந்த போது, இராணுவம் தொடர்பான எந்த தகவலையும் நாம் அறியவில்லை. அதற்கான மனநிலையில் நாம் இருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பில் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணை மீதும் எமக்கு துளியளவேனும் நம்பிக்கையில்லை”

இவ்வாறு சர்வதேச மனிதாபிமான செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகாவிடம் எடுத்துரைத்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரில் மே 18ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் ஜக்கிய நாடுகள் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைவருமான ஜஸ்மின் சூக்காவுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது போரின் இறுதித் தினத்தில் படையினரிடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் ஜஸ்மின் சூக்கா காணொலி நேரலை தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாடியிருந்தார்.

“இறுதிப் போரில் சரணடைந்த எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டறிய 2013ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்தோம்.

எமது பிள்ளைகளை ஒப்படைத்த இராணுவ அதிகாரிகளின் விவரம், பிள்ளைகளை இராணுவ ஏற்றிச் சென்ற வாகனத்தின் இலக்கம் என்பன எமக்குத் தெரியவில்லை எனச் சுட்டிக்காட்டி எமது வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இராணுவம் தொடர்பான விவரத்தை அறியும் மனநிலையில் நாம் அப்போது இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தோரை சரணடையுமாறு இராணுவம் அறிவித்தது. அதனாலேயே நாம் பிள்ளைகளை ஒப்படைத்தோம்.

இந்த நிலையில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் முன் நாம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. எனவே உள்நாட்டில் நடைபெறும் விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை” என்று தாய்மார்கள் கண்ணீருடன் எடுத்திரைத்தனர்.

இறுதிப் போரின் நிறைவில் ஒரே நாளில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர்களும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான
இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையின் விவரங்களை அறிய,

இங்கே கிளிக் செய்யவும்