அனைத்து அரச ஊழியர்களுக்கும் நவம்பர் பட்ஜெட்டில் சம்பள அதிகரிப்பு!

0

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களும் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தும் பணிகளை நிதி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

கூட்டு அரசின் 4ஆவது வரவு செலவுத் திட்டம் வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படுகிறது. அதன் போது, அனைத்து அரச துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களது சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளம் ஒரே தடவையில் மாற்றியமைக்கப்படும் சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அனைத்து அரச துறைகளிலும் பணியாற்றும் உத்தியோகத்தர்களது சம்பள ஏற்றத்தை ஆராய சிறப்பு ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஒக்டோபர் நடுப்பகுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஆணைக்குழு அனைத்து அரச துறை தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி சம்பள மறுசீரமைப்புக்கான முன்மொழிவை வழங்கும். அதன்மூலம் எந்தவொரு பாகுபாடுமின்றி நியாயமான சம்பள உயர்வு அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன், ரயில்வே திணைக்களம், தபால் திணைக்களம் என்பவற்றின் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் இந்த ஆணைக்குழு சிறப்புக் கவனம் செலுத்தும்.

ரயில்வே ஊழியர்களது சம்பளம் அதிகரிக்கப்படும் அதே விகிதாசாரத்தில் அனைத்து அரச ஊழியர்களது சம்பளம் அதிகரிக்கப்படும்” நிதி அமைச்சின் மூத்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.