கிளிநொச்சியில் மேல் நீதிமன்றம் உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடத் தொகுதி – நாளை அடிக்கல் நடுகிறார் பிரதம நீதியரசர்

0

கிளிநொச்சி நீதி நியாயதிக்கத்தில் மாகாண மேல் நீதிமன்றம் அடங்கலாக நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளை (3) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறுகிறது.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி அமைச்சர் தலதா அத்துக்கொறல, ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு அடிக்கற்களை நடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி.சில்வா ஆகியோரும் அதிதிகளாகக் கலந்துகொள்கின்றனர்.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி சட்டத்தரணிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

கிளிநொச்சி நகரிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் இந்த புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்ற கட்டடத்தொகுதியை போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் விரிவுபடுத்தி புதிய கட்டடத்தொகுதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரலவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தக்கு கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.