புளொட் உறுப்பினரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்களை அரச பகுப்பாய்வுக்குட்படுத்த நீதிமன்று அனுமதி

0

புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வதற்காக அவற்றை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பக் கோரும் யாழ்ப்பாணப் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு நீதிவான் அனுமதியளித்தார்.

புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது.

அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.

வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றனர்.

அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.

பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 9 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் இன்று (25) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
“சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஏகே47 துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, மற்றும் 2 வோக்கிகள் என 4 பொருள்கள் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்படவேண்டும். அவற்றைத் தயாரித்த நாடு எது? உற்பத்தி ஆண்டு எது? உள்ளிட்ட தகவல்களை அறிவதன் ஊடாக அவை எங்கிருந்து சந்தேகநபருக்குக் கிடைத்தன என்பதை ஆராய முடியும். எனவே குறித்த நான்கு சான்றுப் பொருள்களையும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்ப மன்று அனுமதிக்கவேண்டும்” என்று பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அனுமதியளித்த மன்று, சந்தேகநபரான புளொட் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியலை 14 நாள்களுக்கு நீடித்து உத்தரவிட்டது.

இதேவேளை,
புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரம் அடங்கிய பட்டியல் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் நாகர்கோவில் முகாமிலிருந்து காணாமற்போய்விட்டது.

அதுதொடர்பில் இராணுவ மத்திய ஆயுத வழங்கல் பிரிவிடமும் விவரம் இல்லை. எனவே பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் சான்றுப்பொருள் பட்டியலின் பிரதியை வழங்க மன்று அனுமதியளிக்க வேண்டும். அதன் ஊடாக ஆயுதங்கள் தொடர்பான விவரத்தை கண்டறிந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க முடியும்” என்று இராணுவத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த 3ஆம் திகதி மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here