பாரக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டுகள் பார்சல்

0
18

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாவது:

பாதுகாப்பு மிக்க முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் பாரக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரது பெயர்களில் வந்திருந்திருந்த பார்சல்களும் கண்காணிக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த பார்சல்களில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவை உரிய பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யப்பட்டன. இது பிரபல பணக்காரர் ஜோர்ஜ் சோரோஸ் வீட்டின் அருகில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு போன்று உள்ளது. இவருக்கு எதிராக சில பழமைவாதிகள் சமீபகாலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பார்சல்களில் 6 இன்ச் நீளமுள்ள பைப்பில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டிருந்தன. இது முன்னதாகவே கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்டவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. இதன் நோக்கம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. யாரும், எந்த அமைப்பும் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதுதொடர்பாக புலனாய்வு அமைப்பு கண்காணிப்பு மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்துள்ளது.