லாபம் நிச்சயம்?: வெளியீட்டுக்கு முன்பே ரூபா 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்!

ரஜினி – சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.

ரூபா 550 கோடி செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

அடுத்த வாரம் 2.0 படம் வெளியாகவுள்ள நிலையில் வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடியை (இந்திய மதிப்பில்) வருமானமாக ஈட்டியுள்ளதாக பாலிவுட் ஹங்கமா என்கிற இணைய இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ரூ. 370 கோடி தற்போது கிடைத்துள்ள நிலையில் முதலீட்டைத் திரும்பப் பெற லைகாவுக்கு இன்னும் ரூ. 130 கோடி கிடைத்தாகவேண்டும். தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு உரிமங்கள் மற்றும் வட இந்தியப் பகுதிகளில் கிடைக்கும் லாபம் ஆகியவற்றிலிருந்து அந்தத் தொகையை மீட்டுக்கொண்டுவிடமுடியும். படம் எவ்வளவு மோசமாக விமரிசனங்கள் பெற்றாலும் இப்பகுதிகளிலிருந்து எப்படியும் ரூ. 130 கோடி கிடைத்துவிடும் என்று அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 85 கோடி வெளிநாட்டிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 50 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் 2.0 படம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டும் படமாகவே அமையும் என விநியோக வட்டாரங்கள் கூறுகின்றன.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!