கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு எப்போது இழப்பீடு? யாழ். செயலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்து

0

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான இழப்பீடு வழங்கப்படாமையால் 45 குடும்பங்கள் பாதிப்புக்களாகியுள்ளனர்.

இடர் முகாமைத்துவ அமைச்சால் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னரே குடிசை வீடுகளுக்கான இழப்பீடு வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதும், கஜா புயலை எதிர்கொள்வதற்கு தயார் என முன்னர் குறிப்பிட்ட அவர்களின் வீர வசனங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டை கஜா புயல் தாக்கியது. புயலால் நல்லூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட 45 குடிசை வீடுகள் பாதிப்புள்ளாகின. அவை மண்ணினால் அமைக்கப்பட்டு ஓலைகள் அல்லது தகரங்களினால் கூரை அமைக்கப்பட்டவையாகும். அதனால் பலத்த மழை மற்றும் புயலால் பாதிப்புள்ளாகின.

இந்தப் பாதிப்பையடுத்து குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் ரூபா 10 ஆயிரம் பணமும் இடர் முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்டது. எனினும் குடிசை வீடுகளின் சேதாரங்களுக்கு அந்தக் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

புயலைத் தொடர்ந்து நீடித்த மழையுடனான காலநிலையால் அந்தக் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

“எமது பிரிவில் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இடர் முகாமைத்துவ அமைச்சால் வழங்கப்பட்ட உலர் உணவு மற்றும் குடிசையை சீரமைப்பதற்கான கொடுப்பனவு என்பன வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு மேலதிகமாக இழப்பீடு வழங்கப்படவேண்டுமாயின் இடர் முகாமைத்துவ அமைச்சால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்தான் வழங்க முடியும்” என்று நல்லூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கஜா புயல் இடர் ஏற்படுவதற்கு முன்னர் இடர் முகாமைத்துவ அமைச்சினால் பல்வேறு முன்னாயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இடர் ஏற்பட்ட பின்னர் உலர் உணவு மற்றும் ரூபா 10 ஆயிரம் பணம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் குடிசை வீடுகள் சேதமடைந்தமைக்கான இழப்பீடு வழங்கப்படாமை குறித்து மக்கள் கவலை வெளியிட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பாரா? என்பதுதான் அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here