மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரமும் நீதிமன்றம் செல்லுமா? வெள்ளியன்று தெரியவரும்

0

மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் சபாநாயகரின் முடிவுக்கு ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அதனால் எழுத்துமூல கோரிக்கை முன்வைத்தால் வரும் வெள்ளிக்கிழமை உரிய முடிவை அறிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தை ஏற்று சபாநாயகர் முடிவை அறிவித்தால், இந்த விவகாரம் நீதிமன்றுக்குச் செல்லும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றொரு மனு நீதிமன்றுக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என்று சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதேவேளை, கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகியவர்கள், பொதுஜன முன்னணியில் இருக்கிறார்களா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கிறார்களா என்பதை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும், அந்த குழுவின் கருத்து பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தை தள்ளிப் போடுமாறும்” கேட்டுக் கொண்டார்.

அவர்கள் இருவரது விண்ணப்பத்தையும் ஆராய்ந்த சபாநாயகர், இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறும், இதுகுறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச, கட்சிக்குள் ஆதரவு குறைந்த காலத்தில் பொதுஜன பெரமுன என்ற தனி அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.

இப்போது அவர் அந்த அமைப்பின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தக் கட்சிக்கு போதிய பலம் இல்லை என்பதாலும் அவரை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதிர்க் கட்சி உறுப்பினர்களின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பரிந்துரைக்கு அமைய மகிந்த ராஜபக்சவை எதிர்க் கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக, மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

இதனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா.சம்பந்தனும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த அனுரகுமார திசநாயக்கவும் பதவியிழந்துள்ளனர்.