கலப்பட சாராயத்தினால் பறிபோகும் உயிர்கள்

0
சட்ட மருத்துவர் கனகசபாபதி வாசுதேவா

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றுமுன்தினம் சுமார் 7 ஆயிரம் 500 லீற்றர் எதனோல் (துாய மதுசாரம்) அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

பனம் சாராயத்துடன் கலப்படம் செய்யப்பட இருந்த நிலையில் அது கைப்பெற்றபட்டது. கடந்த இரு வருடங்களாக திக்கம் வடிசாலையில் உற்பத்தியாகும் பனம் சாராயத்துடன் இவ்வாறு கலப்படம் நடைபெற்றுள்ளதா? என்பதை சந்தேகிக்க இச்சம்பவம் வைத்துள்ளது.

சாதாரணமாக பனம் சாராயமானது கள்ளில் இருந்தே பலபடி முறைகளுக்கூடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. வருடத்தின் குறித்த சில மாதங்களில் கள்ளு உற்பத்தி குறைவாக இருப்பதன் காரணமாக பனம் சாராயம் உற்பத்தி குறைவடையும். இதனால் வாடிக்கையாளரின் நுகர்வுத்தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறான கலப்படம் நடைபெற வாய்ப்புள்ளது.

இது தவிர சாதாரண செயன்முறையின் படி பனம் சாராயத்தினை உற்பத்தி செய்ய அதிகளவு பணம் செலவாகும் (உற்பத்தி செலவு ). ஆனால் செயற்கை முறையில் எதனோலுக்கு நீர் மற்றும் உரிய நிறமூட்டிகள் மற்றும் வாசனை பொருள்களை சேர்த்து உருவாகும் பொழுது உற்பத்தி செலவு மிக குறைவாகும்.

இதனால் பெருமளவு இலாபம் கிடைக்கும். உதாரணமாக பனம் சாராயத்தில் எதனொலின் செறிவு 30% எனில் தூய ஒரு லீற்றர் எதனோலில் இருந்து ஏறத்தாழ 33லீற்றர் பனம் சாராயத்தினை தயாரிக்க முடியும். இதனால் பெருமளவு இலாபம் கிடைக்கும்.

தூய எதனோல் பின்வரும் வகைகளில் கிடைக்க பெறுகின்றது
200 Proof Alcohol: Contains 100% Ethanol
190 Proof Alcohol: Contains 95% Ethanol.
160 Proof Alcohol: Contains 80% Ethanol.
140 Proof Alcohol: Contains 70% Ethanol

இவற்றில் நச்சு பொருள்களான மெத்தனால் (கசிப்பு ), அசட்டோன் (acetone ) போன்றன அதிக அளவில் காணப்படும்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தினை அருந்துவதினால் ஏற்படும் தீங்கான சுகாதார விளைவுகளை நோக்குவோம்.

சாதாரணமாக அதிக போதையினை உண்டாக்கும் முகமாக இங்கு அதிக செறிவில் (லேபிலில் குறிப்பிட்ட செறிவினை விட ) எதனோல் ஆனது இருக்கும். இதனால் அதிகளவில் வீதி விபத்துகள், உயிரிழப்புக்கள் உண்டாகும். மேலும் சாதாரண மதுபானத்தினை பாவிப்பவர்களினை விட இவ்வகையான மதுபானத்தினை பாவிப்பவர்கள் குறுகிய காலத்தினுள் ஈரல் அழற்சி போன்ற நீண்ட காலமாக மதுபானம் அருந்துபவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு உள்ளாவர்.

இவற்றுக்கு மேலதிகமாக இவ்வகையான மதுபானத்தினை பாவிப்பவர்கள் இலகுவில் எதனோல் நஞ்சாதல் (ACUTE ETHANOL TOXICITY) என்ற நோய் நிலைக்கு உட்பட்டு திடீர் என்று உயிரிழப்பார்கள். சாதாரணமாக இரத்தத்தில் 300mg /dl என்ற அளவினை எதனோல் தாண்டும் பொழுது திடீர் என்று உயிரிழப்பர்.

இன்றைய காலகட்டதில் நுகர்வோரின் தேவையினை ஈடுசெய்யும் முகமாக பல மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் செயற்கையாக எதனோலினை பயன்படுத்தியே மதுபானத்தினை உற்பத்தி செய்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் சிறந்த நியம அளவினை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறைவாக இருக்கும். மாறாக எவ்வித நியம அளவும் இல்லாமல் கைக்கணக்கில் கலப்படம் செய்தால் ஏற்படும் தீங்கான விளைவுகளும் அதிக அளவில் இருக்கும்.