படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

0

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

அவரது நினைவு தினத்தில் படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ்ப்பாணம் அமைக்கப்பட்டுள்ள தூபி முன்பாக இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்கள் பங்கேற்றன.

இதில் பெருமளவான ஊடகவியலாளர்களுடன் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்