6 கமராக்கள், 2 பற்றரிகள்: மடித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிட்டது சாம்சங்

0


தொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மடித்து விரித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அப்பிள், பிக்சல், ஒன்பிளஸ், எல்ஜி, சோனி உள்ளிட்ட முன்னணி அலைபேசி தயாரிப்பாளர்களை முந்திக்கொண்டு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தனது மடித்து, விரித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

சாம்சங் காலக்சி ஃபோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்படுகிறது. முதலாவதாக சாம்சங் காலக்சி ஃபோல்ட் 4ஜி அலைபேசி வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆயிரத்து 980 அமெரிக்க டொலர்கள். அதாவது இலங்கை ரூபாவில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

சாம்சங் காலக்சி ஃபோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்படுகிறது. இரண்டு வகை அலைபேசிகளுமே 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் ஆகிய இரண்டு திரைகளை கொண்டுள்ளது.

அதாவது, இந்த அலைபேசி மடித்த நிலையில் இருக்கும்போது, 4.6 இன்ச் கொண்ட சாதாரணமான அலைபேசி போன்று பயன்படுத்த முடியும். மடித்திருக்கும் அலைபேசியை விரிக்கும்போது 7.3 இன்ச் கொண்ட டேப்ளட்டாக மாறுகிறது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் 4.3 இன்ச் திரையில் செய்துகொண்டிருக்கும் வேலையை, அலைபேசியை விரிப்பதன் மூலம் ஒரே நொடியில் 7.3 இன்ச் திரையில் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இந்த அலைபேசியின் பிராசசரை எந்த நிறுவனம் வடிவமைக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அது 7என்எம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசியின் சேமிப்பு திறனை பொறுத்தவரை, 12 ஜிபி ரம்மும், 512 ஜிபி ரொம்மும் கொண்டுள்ளது. குறிப்பாக அதிவேக தரவு பரிமாற்றத்திற்கு உதவும் யுனிவர்சல் பிளாஷ் ஸ்டோரேஜ் 3.0வை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

இந்த அலைபேசியில் இரண்டு பற்றரிகள் பொருத்தப்பட்டுள்ளமை புதுமையான சிறம்பம்சமாக கருதப்படுகிறது. அதாவது, 4.3 இன்ச் திரைக்கு தனியே ஒரு பற்றரியும், 7.3 இன்ச் திரைக்கு மற்றொரு பற்றரியும் என மொத்தம் 4,380 எம்ஏஎச் திறனை கொண்ட பற்றரி உள்ளது.

அலைபேசியை கொண்டே தொழில்முறை ஒளிப்பட கலைஞர்களுக்கு சவால் விடுக்கும் இந்த காலத்தில், சாம்சங் காலக்சி ஃபோல்ட் அலைபேசியில் மொத்தம் ஆறு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, 16 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் கமரா, 12 மெகா பிக்சல் கொண்ட வைட் ஆங்கில் கமரா, 12 மெகா பிக்சல் கொண்ட ரேலிபோட்டோ கமரா ஆகியவை அலைபேசியின் பின்புறமும், அதுமட்டுமன்றி இரண்டு கமராக்கள் அலைபேசியின் மற்றொரு திரையிலும் மற்றும் 10 மெகா பிக்சல் கொண்ட செல்பி கமராவையும் கொண்டுள்ளது.

சாம்சங் காலக்சி ஃபோல்ட் அலைபேசியில் ஒரே நேரத்தில் மூன்று செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஆம், நீங்கள் யூடியூபில் காணொலி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சமயத்தில், அதே திரையில் வாட்ஸ்அப், கூகுள் குரோம் போன்ற இருவேறு செயலிகளை ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

நிறங்கள், விலை, வெளியிடப்படும் திகதி என்ன?

நேற்று அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட இந்த அலைபேசி பச்சை, நீலம், வெள்ளி, கருப்பு ஆகிய நிறங்களில் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதலாவதாக அமெரிக்காவில் வெளியிடப்படும் என்றும், பிறகு ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்ட பின்பு, இதன் விற்பனை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படுத்தப்படுமென்று அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் காலக்சி ஃபோல்ட் அலைபேசி ஒரே நினைவகத்தை கொண்டுள்ளதால், அதன் விலையில் எவ்வித  மாற்றமுமில்லை. தற்போதைக்கு ஆயிரத்து 980 அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே அலைபேசியின் சிறப்பம்சங்களுடன் கூடிய 5ஜி மொடல் வரும் மே மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற என்னென்ன அலைபேசிகள் அறிவிக்கப்பட்டன?

சாம்சங் நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சியானது, அந்நிறுவனத்தின் வெற்றிகரமான அலைபேசி வகையான எஸ் சீரிஸின் பத்தாவது வருடத்தை கொண்டாடும் வகையிலே இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில், சாம்சங் காலக்ஸி எஸ்10, எஸ்10 பிளஸ், எஸ்10இ ஆகிய மூன்று புதிய அலைபேசிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, காலக்ஸி எஸ்10 அலைபேசியின் 5ஜி வகை இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 ஆயிரம் ரூபாவிலிருந்து தொடங்கும் இவற்றின் விலை அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம்சங் காலக்ஸி எஸ் 9ஐ விட ஒரு வாரம் முன்னதாக, அதாவது வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதியே மூன்று வகை அலைபேசிகளும் விற்பனைக்கு வருகின்றன.

அலைபேசிகள் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச்களும் நேற்று அறிவிக்கப்பட்டன. சாதாரண பயன்பாட்டாளர்களுக்கு காலக்ஸி வாட்ச் ஆக்டிவ் என்ற ஸ்மார்ட் வாட்சும், உடற்கட்டு பிரியர்களுக்கு காலக்ஸி பிட், பிட் இ ஆகிய ஸ்மார்ட் வாட்ச்களும் மார்ச் மாதம் முதல் ஒன்றன் பின்னொன்றாக விற்பனைக்கு வருகின்றன

உலகின் முதல் மடித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசி எது?

மடித்து, விரித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை வெளியிடும் முன்னணி நிறுவனங்களின் போட்டியில் சாம்சங் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளதாக கருதப்பட்டாலும், சில மாதங்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவை சேர்ந்த ரொயோலே என்ற ஸ்டார்ட்-அப் விற்பனைக்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும், கேமிங் பிரியர்களின் பயன்பாட்டை தாக்குப்பிடிக்கும் வகையில் ஸ்னாப்ட்ராகன் நிறுவனத்தின் சமீபத்திய 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கமரா, 6000 mAH திறனுடைய பற்றரி ஆகியவற்றுடன் ரொயோலேவின் அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

“சாதாரண திறன்பேசியுடன் ஒப்பிடும்போது எங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம்” என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியிருந்தார்.

எவ்வித பயமும் இன்றி குறைந்தது 20,000 முறை இந்த திறன்பேசியை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே நம்பிக்கை தெரிவிக்கிறது.