விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை: அனைத்தும் பழைய விடியோக்கள்: இந்திய விமானப் படை

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எந்த விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் காணொலிகளும், ஒளிப்படங்களும் பழையவை என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப் படையைச் சேர்ந்த சு30-எம்கேஐ ரக விமானங்கள் வழிமறித்து விரட்டி அடித்தன. அப்போது ஒரு பாகிஸ்தான் போர் விமானம் மட்டும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானப் படையின் அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத பாகிஸ்தானின் மற்ற போர் விமானங்கள் இந்திய எல்லையில் இருந்து வேகமாக வெளியேறின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய –  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாக இயக்கப்படும் விமானங்களை மாற்றுப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் லாகூர், முல்தான், பைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதோடு பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அமிருதசரஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

செய்திமூலம்: பிரிஐ

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!