“பொன் அணிகள் போர்” மீள ஆரம்பம் – ஏப்ரல் 11இல் ஒருநாள் போட்டி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பொன் அணிகள் போர் கிரிக்கெட் தொடர் மீளவும் ஆரம்பிக்கப்படுகிறது.

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் ராஜன் – கதிகாமர் வெற்றிக்கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியை வரும் ஏப்ரல் 11ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையே 97 ஆண்டுகளாக பொன் அணிகள் போர் கிரிகெட் தொடர் இடம்பெற்று வந்தது.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் – யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையேயான பொன் அணிகள் கிரிக்கட் போட்டியின் போது, மைதானத்தில் 2 கல்லூரிகளின் பழைய மாணவர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர். அதில் குடும்பத்தலைவர் ஜெயரட்ணம் தனுஷன் அமலன் என்பவர் உயிரிழந்தார்.

அமலன் கொலை செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 6 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நிலுவையிலுள்ளது.

இந்த அசம்பாவித்தையடுத்து 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொன் அணிகள் போர் இடைநிறுத்தப்பட்டது.
பாரம்பரியம் மிக்க பொன் அணிகள் போரை ஆரம்பிக்க இரண்டு கல்லூரிகளின் நிர்வாகம், பழைய மாணவர்கள் சங்கங்கள் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தன.


இந்த நிலையில் இந்த ஆண்டு பொன் அணிகள் போரில் இன்னிங்ஸ் போட்டியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அதன் ஒரு அங்கமான ராஜன் – கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை நடத்த இரு கல்லூரிகளின் சமூகத்துக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இந்தப் போட்டி வரும் ஏப்ரல் 11ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது என்று யாழ்ப்பாணக் கல்லூரியின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!