வடக்கின் போர் சமநிலையானது

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் போர் 113ஆவது கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, சென். ஜோன்ஸ் கல்லூரியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 181 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. டினோசன் 98 ஓட்டங்களைப் பெற்றார். அபினாஸ் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இயலரசன் 5 இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலுக்குக் களமிறங்கிற மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களைப் பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 14 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 121 ஓட்டங்களை எடுத்த நிலையில் நேற்று இரண்டாம் நாள் முடிந்தது.

மூன்றாவதும் இறுதியுமான இன்றைய நாள் ஆட்டத்தில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 9 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்தியது. ஆரம்ப இணையான தனுயன் 66 ஓட்டங்களையும், சௌமியன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய கல்லூரி அணியில் பந்துவீசிய வி.விஜய்ஸ்காந்த் 38 ஓவர்களில் 88 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். செ.மதுசன் 22 ஓவர்களில் 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கியது. ஆரம்ப இணை இலக்குச் சரிவில்லாமல் 50 ஓட்டங்கள் வரை நிலைத்தது. எனினும் அதன் பின்னர் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. இதனால் மத்திய கல்லூரி அணியின் ஓட்டக்குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மத்திய கல்லூரி அணி பெற்றிருந்த நிலையில் ஆட்டம் வெற்றிதோல்வி இன்றி முடிந்தது. மத்திய வரிசையில் மதுசன் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அபினாஸ் 11 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். 

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!