Breaking News

ஆசிரியர்கள் நாளை சுகயீன லீவு: வடகிழக்கில் கறுப்புப் பட்டிப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சேவையாளர் சங்கங்கள் நாளை (13) புதன்கிழமை சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடக்கு – கிழக்கில் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து அடையாளப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், கறுப்புப் பட்டியுடன் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

“வடக்கில் கடந்த மாதம் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் கிழக்கில் வரும் 19ஆம் திகதி முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதனால் வடக்கு – கிழக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

நாளைக் காலை 8 மணி தொடக்கம் 8.30 மணிவரை அரை மணிநேரம் கறுப்புப் பட்டியணிந்து பாடசாலைகளுக்கு முன்பாகவுள்ள வீதியில் நின்று அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து கறுப்புப் பட்டியணிந்தவாறே கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என்று வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

நாட்டின் பிரதான நகரங்களில் நாளைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடை, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக்க, இரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!