பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்- கூட்டமைப்பு ஆதரவு

0

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகியன எதிராகவும் வாக்களித்தன.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 6ஆம் திகதி சபையில் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றது. இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 119 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் 43 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

ஆட்சியைக் கவிழ்ப்போம் – மகிந்த

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய வாக்கெடுப்பில் அரசைத் தோற்கடித்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வழியமைப்போம் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச் இன்று காலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.