பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தனது 79ஆவது வயதில் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.

தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிபட்டு வந்த நிலையில், அதற்காக அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்தச் சூழலில், மகேந்திரனின் உடல்நிலை திடீரென கடந்த புதன்கிழமை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மகேந்திரன்(79) இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முள்ளும் மலரும் படம் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் இயக்குநர் மகேந்திரம். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி என முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக மகேந்திரனின் உடல் காலை 10 மணி முதல் அவருடைய சென்னை – கொளத்தூரில் உள்ள நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது:

எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருப்பதை எனக்கே காண்பித்தவர் இயக்குநர் மகேந்திரன். நடிப்பில் புதிய பரிமாணத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர். முள்ளும் மலரும் படம் பார்த்துவிட்டு உன்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்குப் பெருமைப்படுகிறேன் என்றார் கே.பாலசந்தர் சார்.

பேட்ட படத்தில் அவர் நடித்தபோது நீண்டநாள் கழித்து நிறைய பேசினோம்.

இந்தச் சமுதாயம், அரசியல், சினிமா மீது அவருக்கு நிறைய அதிருப்தி, கோபம் இருந்தது. அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்றால் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, அடுத்தவருக்காகத் தன்னுடைய சுயமரியாதை, சுயகெளரவத்தை விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர் கிடையாது.

அவருடன் சினிமாவைத் தாண்டிய நட்பு இருந்தது. மிகவும் ஆழமான நட்பு. தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரனுக்கு ஓர் இடம் இருக்கும். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு- என்று கூறினார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!