அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் கோத்தாபய- ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்காவிலிருந்து இன்று முற்பகல் நாடு திரும்பினார்.

டுபாய் வழியாக இன்று முற்பகல்  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு  கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் கட்டிப்பிடித்து வரவேற்பளித்தனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு,  எதிராக கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அவரது மகளும், சித்திரவதைக்கு உள்ளான தமிழர் ஒருவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

அமெ. நீதிமன்ற வழக்குகள் எமக்கு ஊக்கமளிக்கிறது

அமெரிக்காவில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் அடிப்படையற்றவை என்று நிராகரித்துள்ள  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்த வழங்குகள் தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் இலங்கையில் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் கூறினார்.

கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு  வழக்குகள் தொடர்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை கோத்தாபய ராஜபக்ச லொஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது சட்டவாளர்களைச் சந்தித்துள்ளார்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   “செயல்முறைகளை தாமதப்படுத்துவதற்காகவும், எனது ஊக்கத்தைக் கெடுப்பதற்காகவுமே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை கவனிக்கும் பொறுப்பை லொஸ்ஏஞ்சல்சில் உள்ள எனது சட்டவாளர்களிடம் கையளித்துள்ளேன்.

எங்கள் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த வழக்குகள், என்னையும் எனது ஆதரவாளர்களையும் திசை திருப்புவதற்கான முயற்சியே ஆகும். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள்  நீதிமன்றத்தில் தாக்குப் பிடிக்காது.

இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.  நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற சிலர் எமது செயல்முறைகளை  தாமதப்படுத்தவே இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். ஏனென்றால் நான் பலமான வேட்பாளராக இருக்கிறேன்.

அவர்கள் தாக்குதல் நடத்தட்டும். நான் தயாராகவே இருக்கிறேன்.

வெளிநாட்டு முகவர்களின் இந்த தந்திரோபாயம் எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் இன்னமும் ஊக்கத்தை அளிக்கும்.

இலங்கையில் உள்ள மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள்  மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

நாங்கள் அதிகாரத்தில் இருந்த போது மிகப்பெரிய அடைவுகளை பெற்றோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கவில்லை. செய்து காட்டினோம்.

வடக்கிலும், தெற்கிலும் வாழும் மக்களின் பொதுவான பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும்.

வெளியாரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், மீண்டும் சரியான தலைமைத்துவம் ஒன்றின் கீழ் நாட்டைக் கொண்டு வர வேண்டும் என்று எமது மக்களை ஊக்கப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!