ஊடரங்கின் போது கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு அனுமதி – பொலிஸ் அறிவிப்பு

0

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கால் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்துக்கு தடை போடப்படாது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

விமானப் பற்றுச்சீட்டுக்களைக் காண்பித்து விமான நிலையங்களுக்குச் செல்வோர் பயணிக்க முடியும். வாகனங்களுக்கு ஊடரங்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பில் இன்று மாலை இரண்டு தரப்புகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அதனால் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு எரியூட்டப்பட்டது.

இந்த மோதலையடுத்து அங்கு சிறப்பு அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அத்துடன், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் அங்கு சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நீர்கொழும்பு, கட்டுநாயக்க, கட்டான, கொச்சிக்கடை, சீதுவ மற்றும் டிவலுபிட்டிய ஆகிய பிரதேசங்களில் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.