பேராசிரியர் விக்னேஸ்வரனின் பதவி பறிக்கப்படடது ஏன்? எதற்கு? எப்படி? – மூன்றாம் பகுதி

0

– நரசிம்மன் –

பேராசிரியர் விக்னேஸ்வரனைத் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கியமை  தொடர்பில் பலதரப்புகளிலும் இருந்து பலவாறான கருத்துக்கள் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தகுதியற்றவர், திறமையற்றவர், ஊழலுக்குத் துணைபோகிறார் என்றெல்லாம் முறைப்பாடுகள் இருந்தாலும் காரணம் கூறாமல் அவரைப் பதவியில் இருந்து நீக்கியமை தவறு என்ற கோணத்தில் அண்மையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் ஏற்கனவே இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்ற நெருக்கம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பேராசிரியர் விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவிக்கு அமர்த்தப்பட்டதற்கு கூட்டமைப்புப் பிரமுகர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதையும், பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு ‘அலுப்பில்லாத’ பேரவையை அமைப்பதில் கூட்டமைப்பார் தோள் கொடுத்தார்கள் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆற்றிய உரை அமைந்திருந்தது என்பதையும் இந்த இடத்தில் தொட்’டுச் செல்லவேண்டியதாகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் – பல்கலைக்கழக சமூகம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் தமிழத் தேசியம் சார் நிகழ்வுகள் அனைத்தையும் பேராசிரியர் விக்னேஸ்வரன் தடுக்கத் தவறினார் என்பதோடு, அவற்றுக்குத் துணை போகிறார் என்ற பார்வையில் அவர் மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அரச உயர் மட்டம் என்பன ‘கடுப்பாகி’ இருந்ததற்கு மேலதிகமாக, கடந்த ஒன்றரை வருடங்களாக பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல முறை கேடான நியமனங்களுக்கு பேராசிரியர் விக்னேஸ்வரன் நேரடியாகத் துணைபோனார்  என்றில்லாவிடினும், வாழாவிருந்து உடந்தையாகினார் என்ற பார்வை அவர் மீது இருந்தது.

பல்கலைக்கழகத்தில், குறிப்பாக விரிவுரையாளர்களை நியமிப்பதில்  மிகப் பெரும் தொகைகள் கைமாறின என்பது அப்பட்டமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் விக்னேஸ்வரனுக்கு இவற்றில் நேரடியாகச் சம்பந்தம் இருந்ததா? இல்லையா என்பதற்கப்பால் கல்வி சார் ஆளணி – விரிவுரையாளர் நியமனங்கள் அனைத்துக்கும் பொறுப்பு வாய்ந்தவர் என்ற வகையில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு அவருக்கு இருந்நது.

வணிக முகாமைத்துவ பீடத்தில் நிதி முகாமைத்துவத் துறையிலும் , கலைப்பீட சமூகவியல் துறை, கல்வித் துறை, பொருளியல் துறை, இந்து நாகரிகத் துறை மற்றும் விஞ்ஞான பீடத்தில் பௌதிகவியல் துறை ஆகியவற்றில் இடம்பெற்ற விரிவுரையாளர் நியமனங்களில் தகுதி வாய்ந்த – திறமை மிக்க பலர் வெளியேற்றப்பட, தகுதியில்லாதவர்கள் – போலித் தராதரங்களை முன் வைத்தவர்களை நியமித்ததோடு மடடுமல்லாமல் மூதவை மற்றும் பேரவை மட்டங்களில் அவற்றை நியாயப்படுத்தி, உறுதிப்படுத்தப்பட்ட முறைகேடுகளைக் கூடத் தட்டிக் கேட்கத் தவறியமை துணைவேந்தரின் நிர்வாகத்திறனின்மையை வெளிப்படுத்துவதாக பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

தனக்கு மிக நெருக்கமான பீடாதிபதிகளையும், பேரவை உறுப்பினர்களையும் கொண்டு அனைத்து முறைப்பாடுகளையும் பேரவை மட்டத்தில் செயலற்றதாக்கச் செய்தாலும், அவை அனைத்தும் மிகப் பெரிய மட்டங்களுக்கு பகிரப்பட்டதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மட்டத்திலும், அரச – அமைச்சு மட்டங்களிலும் பேராசிரியர் விக்னேஸ்வரன் மீது தப்பானதொரு பார்வை விழக் காரணமாகிவிட்டது.

உதாரணமாக வணிக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்ற ஒரு நியமனத்துக்காக பல விமர்சனங்கள் எழுந்த போதிலும், விமர்சனங்களை அடுத்து குறித்த ஒருவரின் நியமனம் இடைநிறுத்தப்பட்ட பின்னும், மீண்டும் நேர்முகத் தேர்வை நடாத்தி மூன்றாவது தடவையில் சர்ச்சைக்குரிய அதே நபரை நியமித்தமைக்காக பல லட்சம் ரூபா பணம் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் ஆதாரங்களோடு முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதே போலவே, விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற விரிவுரையாளர் தெரிவில், குறிப்பிட்ட நபர் ஒருவர் பிழையான காரணங்களைக் காண்பித்து நியமனத்துக்காகக் தெரிவு செய்யப்பட்டிருந்தமையைப் பீடத்தின் பீடாதிபதி உள்பட பலர் கண்டுபிடித்துக் காண்பித்த போதும், பொய்யான தகவல் வழங்கியமைக்காக குறித்த அபேட்சகர் தகுதியற்றவராக்கப்படாமல், தவறைச் சுட்டிக் காட்டியவர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நியமனத்தில் இடம்பெற்ற தவறைத் திசை திருப்ப முனைந்தமையும் பெரும் தலையிடிக்குக் காரணமாயின.

இந்தச் சம்பவம் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சு என்பவற்றைக் கடந்து இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வரை விடயம் முறையிடப்பட்டதனால், பல தரப்புகளும் பேராசிரியர் விக்னேஸ்வரன் துணைவேந்தராக நீடிப்பதை விரும்பவில்லை.

தொடரும்…