6 மாதம் தடுப்பிலிருந்து விடுதலையான போராளி உதவி கோருகிறார்

பாறுக் ஷிஹான்

எனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில் சந்தேகநபராக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்றழைக்கப்படும் அஜந்தன்(வயது-40) கேட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் மேற்கண்டவாறு கூறியதுடன் பொருளாதாரம் மிக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது .சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் நிலமை இப்படியாகிவிடக் கூடாது என்று கூறுவேன். இன்று நான் இவ்வாறு கைது செய்யப்படாது இருந்திருந்தால் எனது குடும்ப பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இருப்பேன்.

நான் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து சில நலன்விரும்பிகள் எங்கள் குடும்பத்திற்கு பொருளாதார  உதவி செய்து  இருந்தார்கள். இவ்வாறு இருந்த போதிலும் எனது விடுதலைக்காக எனது மனைவியின் நகைகள் அன்பாக வளர்த்த மாடு என்பன விற்கப்பட்டன.

எனது கைதால் எனது குடும்பம் எனது பிள்ளைகள் வெகுவாக  பாதிக்கப்பட்டுவிட்டனர். அதனை சீர் செய்ய சில காலங்கள் செல்லும். இப்படியான துயர சம்பவங்கள் இனி  நடந்துவிடக் கூடாது. நாங்கள் மறுவாழ்வளிக்கப்பட்ட போராளிகள். நாங்கள் எமது குடும்பம்  சமுகம் சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றோம். அரசுக்கு எதிராகவோ வேறு சட்டமுறையற்ற செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடமாட்டோம்.

எங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எங்களது இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் – என்றார்.

பல்வேறு வேதனைகளுடன் வாழ்க்கைக்குள் காலடி வைத்து ஓரளவு இயல்பு நிலையினை அடைந்த போதிலும் மீண்டும் தனது வாழ்க்கை பூச்சியத்திற்குள்ள தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

“அத்துடன் வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில்  கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த எனக்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப எனது குடும்ப நிலமையை உணர்ந்து உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” என்றும் அவர் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் எனப்படும் கதிர்காமத்தம்பி இராசகுமாரன்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால்  நேற்று(11)  விடுவிக்கப்பட்டார். இவர் ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய   பதில் நீதவானின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொண்டு வரப்பட்டு முற்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

உதவ விரும்புபவர்கள் தொடர்பிற்கு-0763685539,0779690803

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!