இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா முழு ஒத்துழைப்பு – மைத்திரியிடம் ஷி ஜின்பிங் உறுதி

இலங்கையின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும்,  தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா உறுதி அளித்துள்ளது.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.

எந்த நேரத்திலும் எந்த உதவியும் வழங்குவோம்

சீன ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது,

“சீனா எப்போதும் இலங்கையில் கைகோர்த்துச் செல்ல தயாராக உள்ளது. தீவிரவாத சவால்களில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு சீன அரசு, எந்த நேரத்திலும், எந்த உதவியையும் வழங்கத் தயாராக இருக்கிறது.

நாட்டின் எந்தப் பகுதியில் எந்தவகையான தீவிரவாதம் எழுச்சி பெற்றாலும் அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  கோரிக்கைக்கு அமைய, இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு தற்போதைய அவசர நிலைமைகளில், சீன அரசு 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா பெறுமதியான கொடையை வழங்க சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான 100 ஜீப் வாகனங்களையும், ஏனைய பல கருவிகளையும் இலங்கைப் பொலிஸாருக்கு உடனடியாக வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப உதவி கோரினார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியும் அதனை அடுத்து அரசு எடுத்துள்ள புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சீனத் தலைவருக்கு ஜனாதிபதி எடுத்து விளக்கினார்.

சமூக ஊடகங்களின் மூலம் தவறான பரப்புரைகளைச் செய்து, தீவிரவாதத்தைப் பரப்பும்,  நபர்களை கண்டறிவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவமோ, கருவிகளோ இலங்கையிடம் இல்லை என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

விரைவில் சீன நிபுணர்கள் கொழும்புக்கு

அதற்குப் பதிலளித்த சீன ஜனாதிபதி, இலங்கைக்கு உடனடியாக தேவையான  தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், கருவிகளையும் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரங்களில் உதவுவதற்காக கொழும்புக்கு தொழில்நுட்ப குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பரிமாற்றம்

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரண்டு நாடுகளுக்கு இடையில் புலனாய்வு பரிமாற்றங்களைச் செய்வது குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு

இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து, பாதுகாப்பு துறையில், நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையிலான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!