பேராசிரியர் விக்னேஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டது ஏன்? எதற்கு? எப்படி? நான்காவது பகுதி

  • நரசிம்மன் –

பேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் பற்றி விரிவாக கடந்த பகுதிகளில் ஆராய்ந்திருந்தோம். அவற்றில் விடுபட்ட சில விடயங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குள் ஓரளவுக்குக் கட்டுக்கோப்புடைய – பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காக்கின்ற – இனத்தின் அடையாளமாக விளங்கிய பல்கலைக்கழகம் என்றால் அது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாணவர்களின் ஒழுக்கம் என்பது எந்தவிதமான அழுத்தங்களுமின்றி சுயமாக பின்பற்றப்படுகின்ற ஒன்றாக இருந்து வந்தது. மாணவ, மாணவிகள் நெறிபிறழா வகையில் புறச் சூழலும் அமைந்திருந்தது. ஆனாலும் மாணவிகள் மீது விரிவுரையாளர்கள் சிலரின் துஷ்பிரயோகம் என்பது காலத்துக்குக் காலம் தலைதூக்கத் தவறியதில்லை.

அவ்வாறான அத்தனை சந்தர்ப்பங்களிலும் மாணவ தலைவர்களும், ஆட்சியதிகாரங்களைக் கொண்டிருந்தவர்களும் அவ்வப்போது தட்டித் திருத்தி வந்ததனால் அவை வெளியே கசியா வண்ணம் இருந்தன.

இவ்வாறு மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதில் பிரபலமான இருவர், பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் காலத்தில் ‘எக்கச்சக்கமாக’ மாட்டியிருந்தனர். கலைப்பீடத்தின் நுண்கலைத்துறையிலும், புள்ளி விபரவியலிலும் ‘கொடி கட்டிப் பறந்த’ அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் பல்கலைக்கழக சமூகத்தில் ஓரிருவரைத் தவிர எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை.

ஆனால், தமக்கிருந்த அத்தனை செல்வாக்குகளின் மூலமும், பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் துணைவேந்தராக இருந்த காலத்தில் அவர்கள் இருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், தண்டிக்கப்படாமல் நழுவிக் கொள்வதற்குப் பேராசிரியர் வசந்தி பெரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.
தன்னுடைய சொல்லுக்கு ஆடக் கூடியவர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிப்பதில் இருந்து, விசாரணைகளைத் திசை திருப்புதல், அறிக்கைகளை இழுத்தடித்தல் என தனது பதவிக் காலத்தில் அவர்கள் இருவருக்கும் எதிராக எந்த விதமான கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் பார்த்துக்கொண்ட பேராசிரியர் வசந்தி, தன்னுடைய பதவிக் காலம் முடிந்ததும் பேராசிரியர் விக்னேஸ்வரனை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுப் போய்விட்டார்.

பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவி ஏற்ற காலம் முதல் நுண்கலைத் துறையிலும், கலைப்பீடத்திலும் ‘லீலைகள்’ செய்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை நீதியான முறையில் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

முன்னைய பதவிக் காலத்தில் – பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் துணைவேந்தராக இருந்த காலத்தில் அவர்கள் இருவருக் கெதிராகவும் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தை நாடி இன்றைய நிலையைத் தோற்றுவித்திருக்க முடியாது. மாறாக அவர்கள் இருவருக்கும் போதிய கால அவகாசத்தை வழங்கி, அவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக தங்களுக்கான சட்டக் காவலைப் பெற்றுக் கொள்ள வழி செய்துவிட்டு, இப்போது முழு நெருக்கடியையும் பேராசியர் விக்னேஸ்வரன் மீது சுமத்தியிருக்கிறார் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்.

இந்த பாலியல் சந்தேகநபர்கள் இருவர் மீதும், பல்கலைக்கழக மட்ட விசாரணைகள் முடிவடைந்தவுடனேயே அவர்களைத் தற்காலிகமாகவேனும் பதவியில் இருந்து நிறுத்திய பின் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், இப்போது அவர்கள் பல்கலைக்கழகத்திடமிருந்து மாதாந்த ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு எதிராக வழக்காட வேண்டிய நிலை வந்திருக்காது.

இவர்கள் இருவரில் ஒருவர் மீதான விசாரணைகளை முன்னெடுத்தவர் தற்போது தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் கந்தசாமி. அவரது தலைமையிலான குழு தனது விசாரணை அறிக்கையில் அக்கு வேறு – ஆணி வேறாக அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்திருப்பதாகக் குறிப்பிப்பட்டிருந்தாலும், பேராசிரியர் விக்னேஸ்வரன் தலைமையிலான யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமை அவர் மீது பல்கலைக்கழக சமூகத்துக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருந்தது. அதனால், இந்தச் சம்பவங்களைக் காட்டியும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரச உயர்மட்டங்களுக்கு மொட்டைக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
ஆக மொத்தத்தில் நிர்வாகத்திறனின்மை, கவனமின்மை, பாலியல் துஷ்பிரயோகம் – ஊழல் – மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் உடந்தையாகினார் என்ற குற்றச் சாட்டுகளுக்குத் தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழக சமூகத்தின் தேசியம் சார் எழுச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்பதையும் காரணமாகக் கொண்டு என்றைக்கோ எடுத்த முடிவாயினும் காலம் அறிந்து, அவசரகால நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நேரத்தில் பேராசிரியர் விக்னேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

தகுதி வாய்ந்த அதிகாரி

பேராசிரியர் விக்னேஸ்வரனின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குரிய பணிகளை ஆற்றுவதற்குரிய அதிகாரங்களுடன் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக அதே பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அரசின் பார்வையில், பேராசிரியர் விக்னேஸ்வரன் விட்ட தவறுகள் அனைத்தையும் சீர் செய்யும் வகையில் செயற்படுவார் என்ற நோக்கிலேயே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்று ஒரு வார காலத்துக்குள் சில நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதையும் அறிய முடிகிறது. பேராசிரியர் விக்னேஸ்வரன் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற நியமனங்கள், ஆள் சேர்ப்புகள், பதவியுயர்வுகள் தொடர்பான கோப்புகளைத் தூசு தட்டத் தொடங்கியருக்கிறார் பேராசிரியர் கந்தசாமி.

பேராசிரியர் கந்தசாமி பற்றிய சில தகவல்களோடு அடுத்த பகுதி நிறைவு பெறும்

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!