யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் தயாரித்த Tutor செயலி நாளை வெளியீடு – அன்ரொய்ட் அலைபேசியில் தரவிறக்க முடியும்

0

டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge 2018) முதலிடம் பிடித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து தயாரித்த Tutor என்ற பெயருடைய கணித செயன்முறை செயலி (Mathematics Mobile App) நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Android Play Store இல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுகிறது.

இந்தத் தகவலை செயலி வடிவமைப்பாளரான மாணவன் ப.பிரவீனன் அறிவித்துள்ளார்.

கணிப்பான் (Calculator) சாதனத்தின் தொழிற்பாட்டுக்கு மேலதிகமாக தரவுகளைப் பயன்படுத்திப் பெறும் விடையுடன் செய்கை வழித் தரவுகளையும் ஒரே நொடியில் காண்பிக்கும் வகையில் இந்தச் செயலியை மாணவன் பிரவீனனுன் அவரது சகோதரியும் இணைந்து வடிவமைத்திருந்தனர்.

வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த இவர்களின் தந்தை ஆசிரியராவார். அலைபேசி செயலிகளை உருவாக்குவதில் அதிக அக்கறைகாட்டி வந்த தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் பிரவீனுக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் இராமநாதன் சுகுமார் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

டயலொக் நிறுவனம் நடத்திய அலைபேசி செயலி வடிவமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான போட்டியில் தான் புதிதாக உருவாக்கும் செயலியை சமர்ப்பிக்கவிருந்தார் பிரவீனன். போட்டி விதிகளின் படி அவர் தனிப்பட இந்தச் செயலியை சமர்ப்பிக்க முடியாத நிலையில் பாடசாலையில் சக மாணவர்களின் உதவியைக் கோரினார். எனினும் எவருமே முன்வராததால் பிரவீனன் தனது சகோதரி தர்க்‌ஷிகாவை தனது குழுவில் இணைத்து செயலியை உருவாக்கினார்.

செயலி சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் டயலொக் நிறுவனத்தால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் தமது செயலி தொடர்பில் முழுமையான விளக்கத்தை இருவரும் முன்வைத்தனர்.
இந்த நிலையில் தேசிய மட்டத்தில் 11 பாடசாலை அணிகள் தமது செயலியை முன்வைத்திருந்தன. இறுதிப் போட்டி கொழும்பு றோயல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் 11 அணிகளில் முதலாமிடத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது.

செயலியை வடிவமைத்த மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரியான மாணவி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் Dialog App Challenge 2018 கிண்ணைத்தை சுவீகரித்ததுடன் அவர்களுக்கு 3 லட்சம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
மாணவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன. அத்துடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் அவர்கள் பெருமை சேர்த்தனர்.

அந்தச் செயலியை அனைவரும் தரவிறக்கம் செய்து பயனடையும் வகையில் அதனை அதிதிறன் அலைபேசியில் (Smart Phone) அன்ரொய்ட் கூகுள் பிளே ஸ்ரோரில் (Android Google Play Store) நாளை செவ்வாய்க்கிழமை (மே 28) மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன் வெளியிடுகிறார்.

மாணவனின் முயற்சிக்கு ஆதரவாகவும் அவருக்குப் பாராட்டும் வகையிலும் உலகத் தமிழர்கள் அனைவரும் அதனை தரவிறக்கம் செய்து செயலிக்கான மதிப்பாய்வை வழங்கவேண்டும்.
இதேவேளை, ஆசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டியிலும் மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், தான் தயாரித்த அதிதிறன் அலைபேசி செயலியை (Smart Phone App) சமர்ப்பித்திருந்தார். அதிலும் அவரது செயலிக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.