ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா

0

ஐசிசி உலகக் கிண்ண 2019 தொடரின் நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.

ப்ரிஸ்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

முதலில் ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 207 ஓட்டங்களை எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் ரமத் ஷா 60 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களை எடுத்திருந்தார். நஜிபுல்லா 49 பந்துகளில், 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.

38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 207 ஓட்டங்களை எடுத்தது.

அதன்பின் 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 209 ஓட்டங்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

அனைத்து விதத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 114 பந்துகளில் எட்டு பவுண்டரிகளுடன், 89 ஓட்டங்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் ஃபின்ச் 49 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ஓட்டங்களை எடுத்தார்.

இதுவரை ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி வியாழனன்று, ட்ரெண்ட் பிரிட்ஜில் மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி செவ்வாயன்று கார்டிபில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.