முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் முடிவை வழங்க தமிழக அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வார காலஅவகாசம் கோரியுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் 2014ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


இதனிடையே, ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம்  கோரியது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!