கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: நிசாந்த சில்வாவை இடமாற்ற ஜனாதிபதி அழுத்தம் தந்தார் – பூஜித் ஜயசுந்தர சாட்சியம்

0

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்தார் ” என்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளரால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படியே, நான் நிஷாந்த டி சில்வாவின் இடமாற்றும் உத்தரவுக்கு கையெழுத்திட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இன்று முற்பகல் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை பகுதிகளில் தமிழர்கள் உள்பட 11 இளைஞர்கள் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக அவர்களின் உறவினர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த சம்பவத்தில் கடற்படையின் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் பல கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.

நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்வதற்கான தேவை ஏன் ஜனாதிபதிக்கு ஏற்பட வேண்டும் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டேதார் அப்போது பூஜித் ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பினர்.

பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கும், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகிறது என நாம் எண்ணுவதாக பூஜித் ஜயசுந்தர பதிலளித்தார்.

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத பின்னணியில், ஏன் அரசியல் அழுத்தங்களுக்கு நீங்கள் உட்படுத்தப்பட்டீர்கள் என நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பினர்.

எனது மேலதிகாரியான பாதுகாப்பு செயலாளரே எனக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்று பூஜித் ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த இடமாற்ற விவகாரம், பொலிஸ் ஆணைக் குழுவிற்கும் அறிவிக்கப்பட்டு, ஆணைக்குழுவின் அனுமதியுடனேயே இடமாற்றம் வழங்கப்பட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.