ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் நீஷம், அணித்தலைவர் வில்லியம்சன் கைகொடுக்க நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் டான்டனில் நடந்த உலகக் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்மி நீஷம் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. ஹஜ்ரதுல்லா (34), ரஹ்மத் ஷா (0), அணித்தலைவர் குல்பதினை (4) ஆட்டமிழக்கச் செய்த நீஷம், ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஹஸ்மதுல்லா 59 ஓட்டங்களை எடுத்து அரை சதம் கடக்க, ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவரில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (0), முன்ரோ (22) ஏமாற்றினர். அணித்தலைவர் வில்லியம்சன் அரை சதம் கடந்தார். ரோஸ் ரெய்லர் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 79 ஓட்டங்களுடனும் லதாம் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


அதிர்ச்சியில் ரஷித்


நியூசிலாந்தின் பெர்குசன் வீசிய 34ஆவது ஓவரின் நான்காவது பந்தை ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் எதிர் கொண்டார். பந்து ரஷித்தின் ‘ஹெல்மெட்டின் கிரில்’ பகுதியில் பட்டு, ‘ஸ்டம்ப்சின் பெயில்சை’ தகர்த்தது.


டக் அவுட்டான, ரஷித் சற்று அதிர்ச்சியுடன் காணப்பட்டார். களத்தடுப்பில் இருந்த நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன், இவரிடம் ஏதும் பிரச்னையா என விசாரித்தார். ‘பெவிலியன்’ திரும்பிய ரஷித், பந்துவீச்சுக்கு வரவில்லை. இன்னும் அதிர்ச்சியுடன் இருப்பதால், முன்னெச்சரிக்கையாக இவருக்கு ஓய்வு தரப்பட்டது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!