ஆஸியை வீழ்த்தியது இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் ஷிகர் தவான் சதம் விளாச, இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

சிறப்பான ஆரம்பம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான ஆரம்பம் தந்தது. கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த தவான், கூல்டர்-நைல் வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் அரை சதம் எட்டினார்.

முதல் விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் சேர்த்தபோது, ரோகித் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த தவான், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். ஸ்டார்க் பந்தில் இவர் 117 ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தார்.

கோலி அரை சதம்

அணித்தலைவர் கோலி, ஹர்திக் பாண்ட்யா இணைந்து அசத்தினர். கோலி ஒரு நாள் அரங்கில் 50வது அரை சதம் அடித்தார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பாண்டியா 48 ஓட்டங்களுடன் சிக்கினார். தோனி 27 ஓட்டங்களில் திரும்பினார்.

ஸ்டாய்னிஸ் பந்தில் கோலி 82 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ஓட்டங்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வோர்னர், அணித்தலைவர் பின்ச் ஜோடி ஆரம்பம் அளித்தது. பின்ச் 36 ஓட்டங்களுடன் ரன் அவுட்டானார். வோர்னர் 56 ஓட்டங்களை எடுத்து அரை சதம் கடந்தார். ஸ்டீவ் சிமித், கவாஜா ஜோடி தொல்லை தந்தது. பும்ரா பந்தில் கவாஜா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிமித் 69 ஓட்டங்களை எடுத்து அரை சதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் டக் அவுட்டானார்.

கலக்கல் வேகம்
சகால் ‘சுழலில்’ மக்ஸ்வெல் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கூல்டர் நைல் (4), கம்மின்ஸ் (8) ஏமாற்றினர். கேரி அரை சதம் கடந்து ஆறுதல் தந்தார். முடிவில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 316 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்தது. கேரி 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக சதம் விளாசிய தவான் தேர்வு செய்யப்பட்டார். இவ்வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!