ஏற்றும் குருதிக்கும் மாற்றும் கிட்னிக்கும் முன்னுக்கு வராத சாதி

0


சாதி சொல்லித் தள்ளிவைக்கும் சுவாமி எது?

ஒரு குரங்கைக் கண்டு அதுவும் கடவுளின் வாகனம் என்று பெருமை கொள்ளும் சைவ சமயத்தவர் நாங்கள். கடவுளைத் தொழுதோம். சந்தணம் வைத்தோம். குங்குமமும் வைத்தோம். அரோகரா சொல்லி ஆண்டவனையும் வணங்கினோம். இங்கேதான்! கீழ் சாதி என சகமனிதர்களையும் கண்டோம். மேல் சாதி நாங்கள் என பெருமையும் கொண்டோம்.

அண்மையில் வரணி அம்மன் ஆலயம் ஒன்றில் சம உரிமை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அறிவீர்கள். சிறுபான்மைத் தமிழன் பெரும்பான்மையோடு போராடியும் இன்னும் இவர்களின் புத்திக்கு புரிதல் வந்து சேரவில்லை என்பது தொண்ணூறுகளுக்கு முதல், மிகவும் தீவிரமாக இருந்த சாதிப்பாகுபாடு, விடுதலைப் புலிகளின் வரவுக்குப் பின்னால் ஓரளவு சீர்செய்யப்படு வந்ததே என்று சொல்லலாம்.

தமது உடலில் ஏற்றும் குருதிக்கும் மாற்றும் கிட்னிக்கும் சாதியை கொண்டு வராத மனிதன் கோவில்களில் மட்டும் இதை தூக்கிவைத்து விசர் ஆடுவது ஏன்? என்று இன்னும் புரியவில்லை நமக்கு.

உண்மையிலேயே சாதி பார்க்க வேண்டுமாயின் இந்த இரண்டு விடயங்களுக்கு மட்டுமே பிரதானமாக பார்க்கவேண்டும்.
ஆனால் அதைத் தவிர்த்து ஆலயங்களில் உள்ள அஃறிணைப் பொருள்களை, இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முட்டுவதால் அதன் தூய்மை குன்றிவிடும் என்ற மூட நம்பிக்கைகளை நம்பி, கடவுளின் பெயரால் முட்டாள் தனமாக, தம்மோடு கூட வாழும் சக மனிதர்களை இழிவு படுத்துகின்றான்.

எங்கே இந்தசாதி அடக்குமுறைகள் இடம்பெறுகின்றன? பிரதான காரணங்கள் யாவை?


இவை பொதுவாக தமிழர்கள் வாழும் பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமப் புறக் கோவில்களில் பெரிதும் இடம்பெறுகின்றன. அதிலும் வலிகாமம் , வடமராட்சி, தென்மராட்சி அத்துடன் யாழ்ப்பாணத்தை அண்டிய தீவகப் பகுதிகளிலும் இவ்வாறான பாகுபாடுகள் இன்றும் வளர்ந்த வண்ணமே உள்ளன.


மிக முக்கியமாக மனிதன் இடத்தில் உள்ள அறியாமை. கடவுள் எல்லோருக்கும் ஒன்று. அந்த ஆண்டவனின் அடியார்களில், ஏழை, எழியோன், பணக்காரன் எனும் பாகுபாட்டுகள் எப்படி ஏற்பட முடியும்? மனிதப் பிறப்பில் எது இழிவானது? என சிந்திக்க மறுக்கும் ஆணவம், இவர்களிடத்தில் வேர் ஊன்றி இருக்கிறது.


மூதாதையர்கள் விட்டுச் சென்ற பிற்போக்கு சிந்தனைகளை. மேலும் மேலும் சரி என எண்ணி, அதை ஒரு பாரம்பரியமாக பின்பற்றுதல். அவர்கள் விட்டுச் சென்ற மூட நம்பிக்கைகளை இன்று வரை நடைமுறைப்படுத்திக் கொண்டிருத்தல்.

மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களான நல்லூர், சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் போன்றனவற்றில் சம உரிமைகளோடு எல்லா மனிதர்களும் கோவிலின் உள் வீதிக்கு செல்ல முடியுமானால், ஏன் இந்த கிராமப் புறக்கோவில்களில் மட்டும் உட்செல்ல முடியால் சம உரிமை இன்றி தாழ்த்தப்பட்டவர்களாக கீழ் சாதி எனும் பெயரில், தூரத்தில் இவர்கள் வைக்கப்படுகிறார்கள்?. இதற்கு முக்கியகாரணம் நான் மேல் சாதி எனும் அகங்காரமும் விட்டுக்கொடுப்பு அற்ற வஞ்சக குணங்களும்.


இதை நடைமுறைப்படுத்துபவர்கள் யார்? உண்மையில் அவர்கள் உயர் சாதியினர் அல்லர். உண்மையிலேயே உயர் சாதியினர் என சொல்லப்படுபவர்கள் மிகவும் நல்லவர்கள், நன்றாக படித்தவவர்கள், நற் பண்புகளோடு வாழ்பவர்கள்.


எனவே இவ்வாறான நல்ல மனிதர்களிடம் எவ்வாறு இவ்வகையான இழிவுச் செயல்கள் வரமுடியும் என நீங்கள் நினைக்கலாம்? உண்மைதான், இந்த உயர் சாதியினரில் ஒரு வகை துவேஷகுணங்களோடு உள்ள சில மனிதர்கள், கோவில்களின் நிர்வாகத்திலும் உறுப்பினர்களாக உள்ளார்கள்.


இவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு குறைந்தவர்கள். மனிததன்மை இல்லாதவர்கள். இந்த பரந்த உலகத்தின் வளர்ச்சியை வெளியே சென்று பார்க்காதவர்கள். தாராள மனப்பான்மை சிறிதளவேனும் இல்லாதவர்கள்.


ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்து வக்கிரகுணங்களை வளர்த்து அதை சரி என எண்ணிகாலம் முழுக்க தங்களை படித்த பண்டிதர்களாக காட்டிக் கொண்டிருப்பவர்கள்.

குறிப்பிட்ட ஒரு பரம்பரையோ அல்லது குடும்பமோ, இன்றேல் குறிப்பிட்ட ஒரு சாதியினரோ தொடர்ச்சியாக கோவில் தர்மகர்த்தாக்களாகவும் பரிபாலன சபை உறுப்பினர்களாகவும் இருப்பதனால், பிற்போக்கு கொள்கைகளும் அன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.


எனவே அங்கே மாற்றங்களை விரும்பாத ஒரு சமுதாயம் தொடர்ச்சியாக கோவில்களின் நிர்வாகத்தில் இருப்பதனால், மீண்டும் மீண்டும் ஏற்றத் தாழ்வுகளும் துவேஷ குணங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனவே வாழையடிவாழையாக இது ஒவ்வொரு சந்ததிக்கும் காவு கொள்ளப்படுகிறது.


பெரும்பாலான கிராமப்புறக் கோவில்கள் தனியார்களுக்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கோ சொந்தமாக உள்ளது. இதனால் இங்கே அரச தலையீடுகள் இன்றி தனையார்களின் தன்னாதிக்கத்தோடும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இவைகள் இருப்பதனால், மற்றவர்கள் இவற்றில் தலையிட்டு மாற்றங்களை செய்யமுடியாது உள்ளது.


அருகே இருக்கும் கடவுளை வணங்கவேண்டும் என்றால் அறுபது அடிதூரத்தில் இருந்துதான் வணக்கவேண்டும். இவாறான அடக்குமுறைகள் இருக்கும் கோவில்களில் கடவுள் எப்படி இருப்பர்?
கடவுளுக்கே கட்டுப்பாடு போட்டு கடவுளின் சிலையை கூட நேராகபார்த்து கூப்பிட முடியாமல் செல்கின்ற பத்தர்கள்தான் இந்தக் கோவில்களில் அதிகம் உண்டு.


நாலு மனிதர்கள் எடுக்கும் இவாறான சின்னத் தனமான முடிவுகளை, எதோ கடவுள் சொல்லி செய்வதுபோல் செய்யும் ஆலய நிர்வாகிகளே அதிகம் இவ்வாறான இடங்களில்.


சிலையைக் காண கதவைதிறந்து விடுங்கள், சிறுபிள்ளைத்தனம் இனியும் வேண்டாம். கற்சிலையை காணவும் அதைதொட்டுத் தழுவமும் ஒவ்வொரு அடியவனுக்கும் உரிமை உண்டு. உணர்ந்து நடவுங்கள். முள்ளிவாக்காலில் நாம் அழிவு நிலையில் இருந்த போதும் செத்து மடிந்தபோதும், நம்மை பிரித்துப்பார்க்காத நம் உறவுகள், ஆலயம் என்று வந்தவுடன் பிரித்துப்பார்ப்பது ஏன்?

பசியால் வாடிபட்டினியாய் இருந்தபோதும், போர் அழிவில் உயிர்காக்க தப்பி ஓடிய போதும், ஒத்தாசை புரிந்தவர்களில், பசிக்கு சோறு போட்டவர்களில், எங்கள் காயங்களுக்கு மருந்து போட்டவர்களில், எவர எந்த வகை சாதி என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் குருதி கொடுத்திருக்கிறார்கள். கிட்னி கொடுத்திருக்கிறார்கள்.


பலர்தங்கள் உடல் உறுப்புகளையயே தானம் செய்திருக்கிறார்கள். எனவே இங்கே மனிதாபிமானம்தான் முன் நிற்கவேண்டும். இவன் எந்த ஊர்? எந்தச் சாதி? என்பது அல்ல.


கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். இன்று கோவில்கள் இருக்கும் ஊர்களாலேயே பிரச்சனைகள் உருவாக்கினறன. எனவே ஆலய தர்மகர்த்தாக்களே கண்ணப்பனை நினையுங்கள். நந்தனார் வரலாற்றை ஒரு தடவை படியுங்கள். மாற்றங்களுக்கு முன் வாருங்கள். உங்கள் சந்ததிகள் வாழ்வு, நன்றே மலர நல்லதையே செய்யுங்கள்.


கடவுள் உண்டு. ஆனால் அவனை வைத்து வழிபடும் கோவில்கள் போலி ஆகலாம். அன்பை காட்டுங்கள். அகங்காரம்வேண்டாம். ஆண்டவன் அருள்வது பக்தனுக்கே!பணக்காரனுக்கோ அல்லது பால் ஊற்றும் சாதிக்காரனுக்கோ அல்ல.

பகீரதன் கணபதிப்பிள்ளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here