பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்துமா? இன்று விறுவிறு மோதல்

உலகக் கிண்ண லீக் போட்டியில் இன்று இந்திய அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இங்கிலாந்தில் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ரொபின்’ முறையில் தலா ஒரு முறை மோதுகின்றன. இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

1983, 2019 என இரு முறை சாம்பியன் ஆன இந்தியா, கடந்த ஒரு ஆண்டாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இம்முறை முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை வென்றது. கடந்த போட்டியில் ஷிகர் தவான் சொதப்பினார். ரோகித் சர்மா மட்டும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.

மத்திய வரிசையில் கோலி தடுமாறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 4வதாக வந்த லோகேஷ் ராகுல், மூத்த வீரர் தோனி உள்ளிட்டோர் மீண்டும் அசத்த வேண்டும். ஆடுகளத்துக்கு ஏற்ப சகல துறை வீரர்களின் இடத்தில் ஹர்திக் பாண்ட்யாவுடன், விஜய் சங்கர் கைகோர்க்கலாம்.

சமிக்கு இடம்

பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்வர் கூட்டணி மீண்டும் நம்பிக்கை தரலாம். சுழலில் சகால் ‘ஜாலம்’ காட்டுகிறார். குல்தீப் முன்னேற்றம் காண வேண்டும். சமீபத்திய ஒருநாள் தொடரில் இருவரது சுழலையும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். இதனால் இன்று குல்தீப்பிற்கு பதிலாக முகமது சமிக்கு இடம் தரலாம்.

ஒருவேளை இரு சுழல் இடம் பெற்றால் புவனேஷ்வருக்குப் பதில் சமிக்கு இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
துடுப்பாட்ட பலம்

சிமித், வோர்னர் தடைக்கு பின் அணிக்கு திரும்பியதால், ஐந்து முறை சம்பியன் ஆஸ்திரேலிய அணி அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அணித்தலைவர் பின்ச், கவாஜா, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், கடந்த முறை 92 ஓட்டங்கள் விளாசிய கூல்டர் நைல் என துடுப்பாட்ட வரிசை நீள்கிறது.

ஸ்டார்க் மிரட்டல்
வேகப்பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்த ஸ்டார்க், கம்மின்ஸ், கூல்டர் நைல், பெஹ்ரன்டர்ப் கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது. சுழலில் ஜாம்பாவுக்கு மட்டும் இடம் என்பதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் நிச்சயம்.

49–77

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 136 ஒருநாள் போட்டிகளில் மோதின. இதில் இந்திய அணி 49 போட்டிகளில் வென்றது. ஆஸ்திரேலியா 77 ல் வெற்றி பெற்றது. 10 போட்டிகளுக்கு முடிவில்லை.

  • 2016 முதல் இரு அணிகள் மோதிய 14 போட்டிகளில் இந்தியா 9ல் வெற்றி பெற்று (5 தோல்வி) ஆதிக்கம் செலுத்துகிறது.
  • உலகக் கிண்ண அரங்கில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக பங்கேற்ற 45 போட்டிகளில் 3 ல் தான் தோற்றுள்ளது.

3

உலகக் கிண்ண அரங்கில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 3ல் தான் வென்றது. ஆஸ்திரேலியா 8ல் சாதித்தது.

  • 1999 உலகக் கிண்ணத் தொடரில் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 77 ஓட்டங்களால் தோற்றது.

மழை வருமா

லண்டன் ஓவலில் இன்றைய வெப்பநிலை குறைந்தபட்சம் 10, அதிகபட்சம் 19 டிகிரி செல்சியஸ் இருக்கும். மாலை வரை வானம் மேகமூட்டம், வெயில் என மாறி மாறி காணப்படும். மழை வர அதிகபட்சம் 9 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதால், போட்டிக்கு சிக்கல் இல்லை.

ஆடுகளம் எப்படி
ஓவல் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும். துடுப்பாட்டத்துக்கும் கைகொடுக்கும் என்பதால் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!