சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு

இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  இன்று திங்கட்கிழமை (ஜூன் 10, 2019) ஓய்வு பெற்றார்.

பஞ்சாபைச் சேர்ந்த இடது கை துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங்,  2011-உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா கிண்ணம் வெல்ல முக்கிய பங்காற்றினார். ஒருநாள், டி20 ஆட்டங்களில் அபாரமாக ஆடிய நிலையில், புற்றுநோய் பாதிப்பால், கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக விலகினார்.

இந்நிலையில் சர்வதேச  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங் (வயது-37) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

கடந்த 17 ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இந்த 22 யார்டுகளில் சுமார் 25 வருடங்களை கழித்துவிட்டேன். வாழ்க்கைப் போராட்டத்தையும் எனக்கு கிரிக்கெட் தான் கற்றுக்கொடுத்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம். எனது கிரிக்கெட் வாழ்க்கை பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. அது தற்போது நிறைவடைந்துள்ளது – என்றார்.

40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 என மொத்தம் 402 சர்வதேசப் போட்டிகளில் யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார். 19 வயது இளைஞராக 2000-ம் வருடம் சம்பியன்ஸ் டிராபி தொடரில் சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்த யுவராஜ், 2003 நாட்வெஸ்ட் டிராபியை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். 

டி20 போட்டிகளில் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது. மேலும் 2000-ம் ஆண்டு யு-19 உலகக் கிண்ணத் தொடர், 2007 டி20 உலகக் கிண்ணம், 2011 50 ஓவர் உலகக் கிண்ணம் ஆகியவற்றை இந்தியா கைப்பற்ற முக்கியப் பங்காற்றியுள்ளார். இதில் யுவராஜின் சாதனைகள் அளப்பரியது. 

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!