தென்னாபிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் மழையால் ரத்து

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ‘ரவுண்டு ரோபின்’ முறையில் தலா ஒரு முறை லீக் போட்டிகளில் மோதுகின்றன. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த ஆட்டத்தில் 3 போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாத தென்னாபிரிக்கா, இரண்டில் தலா வெற்றி, தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை சந்தித்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஹோல்டர், களத்தடுப்பைத் தேர்வு செய்தார். தென்னாபிரிக்க அணியில் ஷம்சி, டுமினி நீக்கப்பட்டு மார்க்ரம், ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ரசல், லீவிசிற்குப் பதில் டேரன் பிராவோ, கீமர் ரோச் இடம் பிடித்தனர்.

விக்கெட் சரிவு

தென்னாபிரிக்க அணிக்கு அம்லா, குயின்டன் டி ஹொக் ஜோடி ஆரம்பம் கொடுத்தது. அம்லா 6 ஓட்டங்கள் எடுத்த போது, காட்ரெல் பந்தில் சிக்கினார். மறுபக்கம் காட்ரெல் பந்தில் பவுண்டரி அடித்தார் குயின்டன். போட்டியின் 7வது ஓவரை வீசிய காட்ரெல், இம்முறை மார்க்ரமை 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்புச் செய்தார்.

தென்னாபிரிக்க அணி 7.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 29 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. குயின்டன் (17), அணித்தலைவர் டுபிளசி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் தொடர்ந்து லேசான துாறல்கள் நீடித்தது. ஐந்து மணி நேரமாக இதே நிலை நீடிக்க போட்டியை ரத்து செய்வதாக போட்டி நடுவர் அறிவித்தார். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. சமீபத்தில் பாகிஸ்தான், இலங்கை மோதலும் மழை காரணமாக நாணயச்சுழற்சிகூட போடாமல் மழையால் ரத்தானது.

யாருக்கு சிக்கல்
தென்னாபிரிக்க அணி முதல் 4 போட்டியில் இதுவரை வெற்றி பெறவில்லை. அடுத்து ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா என ஐந்து அணிகளையும் வென்றால், அரையிறுதி குறித்து யோசிக்கலாம்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!