போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தாதீர்கள் – பழைய செம்மலை பிக்குவிடம் மனோ கணேசன் வலியுறுத்து

“முல்லைத்தீவு மாவட்ட மக்கள் போரால் பல துயரங்களை சந்தித்தவர்கள். அந்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம். அவர்கள் தாமும் இலங்கை மக்கள் என ஏற்றுக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவேண்டும்” என்று இந்து சமய அலுவல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பழைய செம்மலை நிராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில் விகாரை அமைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் பிக்குவிடம் கேட்டுக்கொண்டார்.

“முல்லைத்தீவு மக்களிடத்தில் மீண்டும் மீண்டும் பிரிவினையை தூண்டும் விதமாக செயற்பட வேண்டாம். அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என்றும் அமைச்சர் மனோ கணேசன், பொலிஸாரிடம் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்து சமய அலுவல்கள், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

“முல்லைத்தீவு நீதிமன்றத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற கட்டளையை இரண்டு தரப்பும் மதித்து செயற்படவேண்டும். அங்கே நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக வேலை செய்பவர்களை பொலிஸார் இடையூறு செய்யக்கூடாது.

அதேபோன்று நீதிமன்றக் கட்டளையை மதிக்காது அனுமதிகள் எதுவும் பெற்றுக்கொள்ளாது அபிவிருத்தி வேலை செய்கின்ற பிக்கு தரப்பினரோ அல்லது பிள்ளையார் ஆலய தரப்பினரோ இருந்தால் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸார் பக்கச்சார்பாக இந்த விடயத்திலே செயற்படாது, நீதியை நிலை நாட்ட வேண்டும்” என்று அமைச்சர் மனோ கணேசனால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

“முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், பொலிஸார், பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து தற்போது வரை அந்த சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதியில் நடைபெற்று வருகின்ற வேலைகள் தொடர்பாகவும் தற்போது வரை எவ்வாறான கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தொடர்பாக காணொலிப் பதிவு ஒன்றை பதிந்து ஆவணமாக வைத்துக்கொள்ளவேண்டும். அதுதொடர்பான அறிக்கை ஒன்றை தயார் படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்” என்றும் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

தற்போது இந்த ஆலய விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டால், அங்கே நிராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பான ஆவணங்கள் ஆராயப்பட்டு அதில் உள்ள உண்மை நிலமைகளை ஆலயம் சார்பாக இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு நீதிமன்றத்தில் தமது நியாயத்தையும் முன்வைக்கும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

மேலும் பிள்ளையார் ஆலய தரப்பினர் உரிய திணைக்களங்களின் அனுமதிகளோடு இந்த பிள்ளையார் ஆலய பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சும் அதற்கான நிதி உதவிகளை வழங்கும்” என்று அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்ற அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த பிக்குவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கே இருக்கின்ற பௌத்த ஆலயம் மற்றும் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!