மடு அன்னையின் திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் சோதனை நடத்தப்படும் – மன்னார் ஆயர் விளக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதா ஆலய ஆடி மாதத் திருவிழாவில் பங்கேற்க வரும் அனைத்து பக்தர்களும் சோதனைகளுக்கு உள்படுவார்கள் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்கலாக 15 திணைக்களங்களின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடிதண்ணீர் வசதி, போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

“மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி நடத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழமை போல் இவ்வருடமும் ஆடி மாத திருவிழா நடத்துவதற்கு எதிர் பார்க்கின்றோம்.

இன்றைய தினம் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் கூடி முடிவுகள் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக மடு திருத்தலத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டது.

மக்கள் வந்து மடு அன்னையின் பரிந்துரையினை பெற்றுக்கொண்டு ஆசிர்வாத்தின் வழியாக அவர்களின் வாழ்க்கை சிறப்புப் பெற வேண்டும். பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மக்களும், பக்தர்களும் தயாராக வர வேண்டும்.

உங்களையும், உங்கள் உடைமைகளையும் சோதனை செய்துதான் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதனை மனதில் வைத்து ஆடி மாத திருவிழாவிற்கு வர முடியும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்” என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்தாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உள்பட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!