ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் சஹ்ரானுடன் உடன்படிக்கை; ஐஎஸ் செயற்பாட்டாளர் ராசிக் கைது செய்யப்படவில்லை – தெரிவுக்குழு முன் அசாத் சாலி சாட்சியம்

“தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான், மக்களிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் அரசியல்வாதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதனால் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையைச் செய்துகொண்டனர்” என்று மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார் .

அத்துடன், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று சாட்சியமளித்தார். அதன்போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.


அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது:

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்குதான் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உதவிகளை வழங்குவதாக அதன் தலைவர் சஹ்ரான் ஹாசிம் அறிவித்திருந்தார். சஹ்ரான், கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி அவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

அதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சஹ்ரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டார்.
ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் சஹ்ரானுடன் உடன்படிக்கைகளை செய்திருந்தனர். தேர்தல் பரப்புரைகளின் போது, பட்டாசுகளை கொளுத்தக்கூடாது, பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டன .

மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கு நிறுவனத்திற்கான நிதியுதவி சவூதி அரேபியாவின் ஊடாக கிடைத்தமையை நான் அறிவேன். இந்த பல்கலைக்கழகம் முழுமையான ஷரியா கற்கை நெறியை கற்பிக்கும் பல்கலைக்கழகம் கிடையாது. அங்கு ஒரு பாடநெறி மாத்திரமே ஷரியா. முஸ்லிம்களின் பாரம்பரிய சட்டமான ஷரியா சட்டம், முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமானது.

பள்ளிவாசல்களை நிர்வகித்தல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்டவையே ஷரியா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன .அந்த சட்டத்தில் எந்தவித பிழையான விடயங்களும் கிடையாது .

அப்துல் ராசிக் என்ற நபர் கைதுசெய்யப்படாது வெளியில் நடமாடுகின்றமையானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.


அப்துல் ராசிக் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று தடவைகள் நான் எடுத்துரைத்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார் அப்துல் ராசிக், ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார். அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.

ஆடைகள் குறித்து அரசினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஊடாக முஸ்லிம் பெண்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி முஸ்லிம்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர இந்த தெரிவுக்குழு முன்வரவேண்டும் – என்றார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!