பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா

உலகக் கிண்ண லீக் போட்டியில் டேவிட் வோர்னர் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் போராட்டம் வீணானது.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டான்டனில் நேற்று நடந்த 17ஆவது லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் நீக்கப்பட்டு ஷஹீன் அப்ரிடி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன், ஷோன் மார்ஷ் தேர்வாகினர். நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அகமட் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

பின்ச் அரைசதம்

ஆஸ்திரேலிய அணிக்கு அணித்தலைவர் ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் ஜோடி நல்ல ஆரம்பம் தந்தது. முதல் ஓவரை முகமது அமிர், ‘மெய்டனாக’ வீசினார். ஷஹீன் அப்ரிடி பந்தில் ஒரு சிக்சர் அடித்த பின்ச், வகாப் ரியாஸ் வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார்.

ஹபீஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பின்ச், அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ஹபீஸ் வீசிய 21வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் சேர்த்த போது அமிர் ‘வேகத்தில்’ பின்ச் 82 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஹசன் அலி வீசிய 24வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய வோர்னர், சோயப் மலிக் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 10 ஓட்டங்கள் நிலைக்கவில்லை. ஹபீஸ் வீசிய 33வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் 20 ஓட்டங்களுடன் ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஷஹீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய வோனர், ஒருநாள் அரங்கில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய இவர், 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின் வந்த ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு அமிர் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ உஸ்மான் கவாஜா (18), ஷோன் மார்ஷ் (23) வெளியேறினர். நாதன் கூல்டர்–நைல் (2), பட் கம்மின்ஸ் (2) சொற்ப ஓட்டங்களில் அவுட்டாகினர். ஆமிர் வீசிய 49வது ஓவரில் அலெக்ஸ் கேரி (20), மிட்சல் ஸ்டார்க் (3) சரணடைந்தனர்.
ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில், 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்தது. கேன் ரிச்சர்ட்சன் (1) ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது அமிர், 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் டக்-அவுட்டாகி மோசமான ஆட்டம் தந்தார். பாபர் ஆஸம் 30 ஓட்டங்களை எடுத்து ஆறுதல் தந்தார். கூல்டர்–நைல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இமாம்–உல்–ஹக் அரைசதம் கடந்தார். எனினும் 53 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்தார்.

பின்ச் ‘சுழலில்’ ஹபீஸ் 46 ஓட்டங்களுடன் சிக்கினார். சோயப் மாலிக் (0), ஆசிப் அலி (5) ஏமாற்றினர். ரிச்சர்ட்சன் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஹசன் அலி ஓரளவு கைகொடுத்தார். எனினும் ஹசன் அலி அந்த ஓவரிலேயே 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின் அணித்தலைவர் சர்பராஸ் அகமட், வகாப் ரியாஸ் இணைந்து போராடினர். மக்ஸ்வெல் வீசிய 41வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த வகாப், கூல்டர்–நைல் பந்தில் 2 சிக்சர் விளாசினார். எட்டாவது விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்த போது ஸ்டார்க் ‘வேகத்தில்’ வகாப் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு மங்கியது. முகமது ஆமிர் (0) ஏமாற்றினார். சர்பராஸ் 40 ஓட்டங்களுடன் ரன்–அவுட்’ ஆனார்.

பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில், 266 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்து தோல்வியடைந்தது. ஷஹீன் அப்ரிதி 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

5 விக்கெட்

‘வேகத்தில்’ மிரட்டிய பாகிஸ்தானின் முகமது அமிர், 10 ஓவரில், 30 ஓட்டங்களை மட்டும் வழங்கி, 5 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2009ல் கொழும்பில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ஓட்டங்கள் வழங்கி, 4 விக்கெட் கைப்பற்றியது இவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

தவிர, உலகக்கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் சார்பில் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 7வது பந்துவீச்சாளராக அமிர் பதிவு செய்தார். ஏற்கனவே அப்ரிடி, வசிம் அக்ரம், சக்லைன் முஸ்தாக், அப்துல் காதிர், வகாப் ரியாஸ், சோகைல் கான் இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.

108 இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், 15வது சதம் (108 இன்னிங்ஸ்) அடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் குறைந்த இன்னிங்சில், 15வது சதமடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை இந்தியாவின் ஷிகர் தவானுடன் (108 இன்னிங்ஸ்) பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் தென்னாபிரிக்காவின் அம்லா (86 இன்னிங்ஸ்), இந்தியாவின் கோலி (106) உள்ளனர்.

146 ஓட்டங்கள்
ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் சேர்த்தது. இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேல் ஓட்டங்கள் சேர்த்த 5வது ஆரம்ப ஜோடியானது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரீனிட்ஜ்–ஹெய்ன்ஸ் (132 ஓட்டங்கள், 1979, இடம்: ஓவல்), சிம்பா வேயின் கிராண்ட் பிளவர்–டவேர் (115 ஓட்டங்கள், 1983, இடம்: மான்செஸ்டர்), மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஹெய்ன்ஸ்–லாரா (175* ஓட்டங்கள், 1992, இடம்: மெல்போர்ன்), இங்கிலாந்தின் ரொபின் ஸ்மித்–மைக்கேல் ஆதர்டன் (147 ஓட்டங்கள், 1996, இடம்: கராச்சி) ஜோடிகள் இந்த இலக்கை எட்டின.

9வது வெற்றி
ஆஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 9வது (2017–19) வெற்றியை பதிவு செய்தது. தவிர, ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 3வது இடத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் (9 வெற்றி, 1992–93) பகிர்ந்து கொண்டது.

முதலிரண்டு இடங்களில் முறையே தென்னாபிரிக்கா (15 வெற்றி, 1995–2000), நியூசிலாந்து (12 வெற்றி, 2014–18) அணிகள் உள்ளன.

அந்த ஒரு வினாடி…
கடைசி கட்டத்தில் வகாப் ரியாஸ் வெளுத்து வாங்க ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இந்த சமயத்தில் 45வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இவரது இரண்டாவது பந்தை வகாப் அடிக்க, அதை விக்கெட் காப்பாளர் கேரி கச்சிதமாக பிடித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் ‘அப்பீல்’ செய்தனர். கள நடுவர் ருச்சிரா பல்லியாகுருகே (இலங்கை) ‘அவுட்’ தர மறுத்தார்.

‘ரிவியு’ கேட்க லேசான தயக்கம் காணப்பட்டது. இதற்கான 15 வினாடிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கடைசி ஒரு வினாடி இருக்கும் போது ஆஸ்திரேலிய அணித்தலைவர் பின்ச் ‘ரிவியு’ கேட்டார். இதில், பந்து துடுப்பில் உரசிச் சென்றது உறுதி செய்யப்பட, வகாப் ஆட்டமிழந்தார். அந்த ஒரு வினாடியில் ‘ரிவியு’ கேட்க முடிவு செய்தது ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்டது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!